Thursday, October 4, 2018

93. ஜெர்மானிய தமிழகத் தொடர்புகள்



ஜெர்மனியை இன்று நாம் கிழக்கு மேற்கு எனப் பிரிப்பதில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் 1949லிருந்து 1990 வரை German Democratic Republic (GDR அல்லது DDR) என்ற பெயருடன் ஜெர்மனியின் கிழக்குப் பகுதி அடையாளப்படுத்தப்பட்டது. ரஷியாவிற்கு அருகாமையில் அமைந்து விட்டமையால் இங்கு ரஷியத் தொடர்புகள் அதிகமாக எழுந்தன. 1990 வரையிலான காலகட்டம் என்பது ஒரு வகையில் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஏறக்குறைய இரு தனி நாடுகளாக இயங்கும் வகையிலேயே அமைந்தது எனலாம். அதிலும் குறிப்பாக கிழக்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் மேற்கு ஜெர்மனிக்கோ வேறு பகுதிகளுக்கோ செல்வது தடை செய்யப்பட்டிருந்தது என்பதோடு அனுமதி வழங்கப்பட்டாலும் தீவிர சோதனைக்குப் பின்னர் வெளிவரும் கடின நிலையே ஏற்பட்டிருந்தது.

அக்காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் மக்கள் சுதந்திரத்திரத்தை இழந்திருந்தனர். அச்சம் அவர்கள் மனதை நிறைத்திருந்தது. உளவு பார்ப்பது என்பதும் தீவிரவாத, பயங்கரவாத செயல்பாடுகள் என்பதும் விரிவாகியிருந்தன. ஒரு குடும்பத்திற்குள்ளேயே தந்தை மகனை நம்பமுடியாது; தாய் மகனை நம்ப முடியாது; மனைவி கணவனை நம்ப முடியாது; சகோதரன் சகோதரியை நம்ப முடியாது. இப்படி குடும்பங்களுக்குள்ளே கூட உளவு என்பது வேரோடிப் போயிருந்த காலகட்டம் அது. யாரால் எப்போது என்ன துன்பம் நிகழக் கூடும் என அச்ச உணர்வு மேலிட மக்கள் வாழ்ந்த காலகட்டம் அது. கருத்துச் சுதந்திரம் தடைப்பட்டிருந்தது. தண்டனைகள் , தண்டனைகள், தண்டனைகள் - எதற்கெடுத்தாலும் தண்டனைகள். இந்தச் சூழலில் பொதுமக்கள் அமைதி காக்கவில்லை. பல கோணங்களிலிருந்து உயிரைப் பணயம் வைத்து எதிர்ப்பு வலுவாகக் கிளம்பத்தான் செய்தது. இதுவே படிப்படியாக விசுவரூபம் எடுத்து கிழக்கையும் மேற்கையும் பிரித்த பெர்லின் சுவரை இடிக்கக் காரணமாகியது. பிரிந்த கிழக்கும் மேற்கும் படிப்படியாக இணைந்தன. அக்டோபர் 3ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்த நாளைக் கொண்டாடுகின்றன. இன்று ஜெர்மனி உலக அரங்கில் ஒன்று பட்ட ஒரே நாடாக இயங்குகின்றது. உலகம் முழுவதிலுமிருந்து வாழ்விழந்து அகதிகளாக வருவோருக்கு வாழ்வளிக்கும், மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் நாடுகளின் வரிசையில் முதல் வரிசையில் இடம் பெறும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

பழைய சம்பவங்களின் நினைவுகளினால் இன்றும் கூட கிழக்கு ஜெர்மனியின் பெயரைக் கேட்டால் ஒரு வகையான அச்ச உணர்வு மேற்கில் உள்ளவர்களுக்கு எழுவது இயல்பு. அயல் நாட்டினர் மட்டுமல்ல. உள்ளூர் ஜெர்மானியர்களும் விரும்பி கிழக்கு மாநிலங்களுக்குச் செல்வது குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு வகையில் கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் பெருகி வரும் நாசி சிந்தனை ஆதரவு செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது தான்.

பொருளாதார ரீதியில் கிழக்கு ஜெர்மனியின் மாநிலங்கள் பின் தங்கியிருந்த சூழல் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக மாற்றத்தைக் கண்டிருக்கின்றது எனலாம். பொருளாதார ரீதியில் வலுவிழந்த பகுதி என்றாலும் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கும், ஆய்வுகளுக்கும், தத்துவத் தேடல்களுக்கும், பதிப்பக முயற்சிகளுக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தனிப்பெருமை வாய்ந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்பதை மறுக்க முடியாது. இன்று பெர்லினில் உள்ள அருங்காட்சியகத் தீவு முழுமையும் கிழக்கு ஜெர்மனி பகுதியில் தான் உள்ளது. பல ஆய்வுக்கூடங்கள், தொழில்நுட்ப முயற்சிகள் என வியக்க வைக்கும் பிரமாண்ட கட்டிட வளாகங்கள் நிறைந்த பகுதியாக கிழக்கு ஜெர்மனி விளங்குகிறது . இங்குள்ள பல்கலைக்கழகங்களோ மருத்துவம், தத்துவம், விண்ணியல், பௌதீகம், கணிதம் , தொழில்நுட்பம் என பல துறைகளில் உலகளாவிய நன்மதிப்பையும் உயர் தரத்தையும் பெற்று விளங்கும் கல்விக்கூடங்களாக உள்ளன.

ஜெர்மனி கிருத்துவ மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்ற நாடு. கி.பி.16 வரை ஜெர்மனி முழுமையும் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியிருந்தது. கி.பி. 16ல் கிழக்கு ஜெர்மனியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியவர் மார்ட்டின் லூதர். இவர் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலே - தமிழகத்தோடு 300 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பில் உள்ள கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரம். இங்குள்ள ஃப்ராங்கன் கல்விக்கழகத்திலிருந்து தான் கி.பி 1705ம் ஆண்டு தமிழகத்துக்குச் செல்ல 2 ஜெர்மானிய பாதிரிமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டென்மார்க் அரசரின் அரச ஆணையைப்பெற்று நீண்ட நாட்கள் கடலில் பயணித்து வந்தனர். பாதிரியார் சீகன்பால்கும் பாதிரியார் ப்ளெட்சோவும் 1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி வந்தனர். அதுவே சீர்திருத்தக் கிருத்துவம் (ப்ரோட்டஸ்டண்ட் கிருத்துவம்) தமிழகத்தில் காலூன்றிய வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வு.

ஜெர்மனியில் கடந்த பல ஆண்டுகளாக நான் வசித்தாலும் கிழக்கு ஜெர்மனியில் அவ்வப்போது நிகழும் நாசி ஆதரவு சம்பவங்களைக் கருதி இப்பகுதிக்கு நான் வருவதில் தயக்கம் இருந்து வந்தது. ஆயினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ராங்கன் கல்விக்கழகத்தை நேரில் கண்டு அங்கு ஆவணப்பாதுகாப்பகத்தில் பாதுகாக்கப்படும் தமிழ் ஆவணங்கள் சிலவற்றை ஆராய அனுமதி கேட்டிருந்தேன். தமிழ்ச்சுவடிகளையும் காகித ஆவணங்களையும் காணவும் ஆராய்ந்து குறிப்பெடுக்கவும் அனுமதி கிடைத்ததன் பேரில் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு வார இறுதி வரை ஹாலே நகரில் இருந்து இவற்றை ஆராயும் பணிக்காக கடந்த வாரம் இந்த நகரம் சென்று வந்தேன்.

ஹாலே செல்லும் முன் அலுவலக பணிக்காக லுட்விக்ஸ்ஹாஃபன் நகரம் வந்திருந்ததால் அங்கிருந்து நேரடியாக எனது பயணம் அமைந்தது. வாகனத்தில் ஐந்தரை மணி நேரப் பயணம். ரைன்லாண்ட் பால்ஸ், ஹெசன், தூரிங்கன், செக்சனி அன்ஹால்ட்..... என நான்கு மாநிலங்களைக் கடந்து எனது இந்தப் பயணம் அமைந்தது.

சில ஆண்டுகள் பல நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வாசித்து, பல மாதங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சில வாரங்கள் பயணத்தை திட்டமிட்டு
சில மணி நேரங்கள் பயணித்து, மூன்றரை நாட்கள் கிழக்கு ஜெர்மனியின் ஹாலே நகரத்து ப்ராங்கன் கல்விக்கூடத்திலும் இந்த நகரின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள என் பயண நோக்கத்திற்குத் தொடர்புள்ள வரலாற்றுச் செய்திகளையும் தரவுகளையும் நேரில் சென்று பார்த்துக் குறிப்புக்கள் சேகரித்துக் கொண்டு திரும்பினேன்.

ஹாலே நகரில் முதல் நாள் (20.9.2018) காலை 8 மணிக்கு ப்ராங்கன் கல்விக்கூடத்தின் அரிய ஆவணங்களின் பகுதி பொறுப்பாளர் திரு.க்ரோஷலைச் சந்திப்பதாகக் கூறியிருந்தேன். எனது தங்கும் விடுதியிலிருந்து ஒன்றரை கிமீ தூரத்தில் இக்கல்விக்கூடம் இருப்பதால் நடந்தே செல்வது நகரையும் பார்த்து வர சரியாக இருக்கும் என நினைத்து நடந்து சென்றேன்.

ஹாலே நகரில் சாலையில் பொது வாகனங்கள் சிறப்பாக இயங்குவதைக் காணமுடிந்தது. ட்ராம்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. சைக்கிள் பயணிகளும் அதிகமாக உள்ளனர். ப்ராங்கன் கல்விக்கூடத்தின் பின்பகுதி வழியாக நுழைந்து தோட்ட வளாகத்தைப் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தபோது இந்தக் கல்விக்கூடம் நடத்தும் சிறார்களுக்கான பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டே சென்றது இனிய நிகழ்வு.

ப்ராங்கன் கல்விக்கூடத்தின் வளாகம் பெரியது. ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்பில் இந்த நிறுவனத்தைக் கட்டியிருக்கின்றனர். கட்டிடங்கள் ஒவ்வொன்றும் எண்களால் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு கட்டிடமும் அல்லது பகுதியும் ஒரு தனிப்பட்ட துறைக்காக என இயங்கி வருகின்றன. இக்கல்விக்கூடத்தின் பெரும்பகுதி இன்று விட்டென்பெர்க் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத்துறைகளுகுவாடகைக்கு விடப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொண்டேன்.

திரு.க்ரோஷல் எனது வருகைக்குக் காத்திருந்தார். பொதுவான அறிமுகங்கள். தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய எனது விளக்கம் எனக் கேட்டபின் எனக்குப் பயன்படுமே என ஒரு கோப்பினைக் கொடுத்தார். அது லைப்சிக் மிஷனின் ஆவணங்களின் தொகுப்பு. மேலும் நூலகத்தில் ஒரு பகுதியில் உள்ள லூத்தரன் சபையின் இந்தியாவிற்கான செயல்பாடுகளைப் பற்றிய ஆய்வு நூல்கள் வரிசையைக் காண்பித்தார். சில முக்கிய நூல்கள் அந்த வரிசையில் இருந்தன. அவற்றை வாசிக்க நிச்சயமாக நான் ஒதுக்கியிருந்த மூன்று நாட்கள் போதாது தான். பின்னர் வளாகத்தின் சிறிய அருங்காட்சியகப் பகுதிக்கு நான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவில் பணியாற்றிய பாதிரிமார்கள் திரும்பி வந்த போது கொண்டு வந்த சில பொருட்களின் சேகரிப்பு அங்கிருப்பதாக அறிந்து கொண்டதோடு மதியவேளையில் அப்பகுதிக்கும் சென்று பார்த்து வந்தேன்.

மதியம் ஆய்வு மாணவர்களோடு இணைந்து மதிய உணவு பல்கலைக்கழக வளாக மென்சாவில் (உணவகம்) எடுத்துக் கொண்டேன். மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவை அந்த உணவு நினைவு படுத்தியது.

மாலையில் ஹாலே நகர வீதியில் உலாவிய போது நகர மையத்தின் அழகை ரசிக்க முடிந்தது. கிழக்கு ஜெர்மனி என பொதுவாக மனதில் நான் ஏற்றி வைத்திருந்த சில கணிப்புக்களை இந்த அனுபவம் மாற்றியது. இங்கு பல இன மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்கர், இசுலாமியர், இந்தியர், அரேபியர்கள். கால மாற்றமும் அரசியல் மாற்றமும் ஏற்படுத்திய சூழலின் நல்ல விளைவு இது.

கிழக்கு ஜெர்மனியில் பொருட்களின் விலை மேற்கு மாநிலமான பாடன் உர்ட்டெம்பெர்க் விட சற்று மலிவாகவே உள்ளது.

எனது ஆய்வின் முதல் இரண்டு நாட்களும் கிழக்கு ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள ப்ராங்கன் கல்விக்கழக நூலகத்தின் ஒரு பகுதியில் நீண்ட நேரத்தைச் செலவிட்டு இங்குச் சேகரிப்பில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்களை ஆராய்ந்தேன். முப்பது தமிழ் ஓலைச்சுவடிகள்; ஏறக்குறைய 20 காகித ஆவணங்கள் என் ஆய்விற்காகப் பட்டியலிலிருந்து தேர்வு செய்து கொடுத்திருந்தேன். கேட்ட அனைத்து ஆவணங்களையும் என் ஆய்விற்கு நூலகத்தார் வழங்கினர்.இந்த ஓலைச்சுவடிகளும் காகித ஆவணங்களும் அனைத்துமே ஜெர்மானிய பாதிரிமார்கள் தானே கைப்பட எழுதிய நூல்கள் மற்றும் கடிதங்கள் தாம். இந்த ஆவணங்கள் பற்றி பெரிதாகத் தமிழாய்வாளர்கள் மத்தியில் இன்று வரை விரிவாகப் பேசப்படாதது தமிழக வரலாற்றில் ஒரு குறையாகவே கருதுகிறேன்.

இன்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழகம் வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள் தமிழ் மொழியைப் படித்து, நூல்கள் எழுதி பயிற்சி செய்து அதனை டோய்ச் மொழியிலும் குறிப்பு எழுதி வைத்த வரலாறு ஆச்சரியம் தருவதாக அமைகின்றது.

எனது ஆய்வில் தமிழகத்தின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய பாதிரிமார்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு எழுதிய முறையில் சில குறிப்பிடத்தக்க விசயங்களை அடையாளம் காணமுடிந்தது. குறிப்பாகத் தமிழ் நெடுங்கணக்கு எழுத்து முறை, சில குறிப்பிட்ட எழுத்துக்களின் வடிவம், சொல்லாடல், பேச்சுத் தமிழ், ஓலையில் ஜெர்மானிய எழுத்து, ஓவியங்களுடன் கூடிய ஓலைச்சுவடிகள், சீர்திருத்த கிருத்துவத்துக்குப் பிரத்தியேகமாக மொழிமாற்றம் செய்யப்பட்ட கதைகளின் தமிழ் மூல நூல், தமிழ் போற்றிப்பாடல்கள், கடிதங்கள் என இவை பன்முகத்தன்மையுடன் விளங்குகின்றன.

இந்தச் சுவடிகள் ஆய்வு ஜெர்மானியர் தமிழ் கற்ற படிப்படியான வளர்ச்சி நிலை, தரங்கம்பாடி, கடலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சீர்திருத்த கிருத்துவ அமைப்பு செயல்பட்ட போது நிகழ்ந்தவை, தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட பிரசுரங்கள் மற்றும் கடிதங்களின் அசல் போன்றவற்றைப் பற்றிய முதல் நிலை தகவல்களை வழங்குவதாகவும் அமைகின்றன.

பாதிரிமார்கள் எழுதிய நூல்களில் காணப்படும் எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களை அவர்கள் கையாண்ட முறை என்பன சில புதிய செய்திகளைத் தருகின்றன. இவை சுவாரசியமான ஆய்வுக்களனை நமக்கு அமைக்கின்றன. உலகின் பல இடங்களில் இயங்குகின்ற பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் இத்துறைகளில் மேலும் ஆராய்ந்து இவை கூறும் செய்திகளை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். தமிழ் ஆய்வில் புதிய பார்வைகளை உட்புகுத்த வேண்டும் என விரும்பும் பல்கலைக்கழக, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் எம்மைத் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள்; உங்களிடம் ஆய்விற்குத் தயாராக இருக்கும் மாணவர்களை இவ்வகைப் பணியில் ஈடுபடுத்துங்கள் .

தமிழ் மொழியையும் தமிழர் வரலாற்றையும் நமக்குக் கிடைக்கின்ற, இருக்கின்ற சான்றுகளை ஆவணப்படுத்தல் முயற்சியும் அவற்றை ஆராய்ந்து வெளியிடும் முயற்சிகளும் தான் நமக்கு இன்றைக்குத் தேவையானது. இவற்றைச் செய்வதை விடுத்து ’உலகில் தோன்றிய முதல் குரங்கே தமிழ் குரங்கு தான்’ என்பது போல பேசிக்கொண்டிருப்பதால் தமிழுக்கும் தமிழருக்கும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆய்வுலகில் இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட விசயங்கள் கேலிக்குட்படுத்தப்படுவதுடன் தமிழர் தம் வரலாறு பற்றிய பொய்யான தகவல்கள் பரவுவதுடன், உலகளாவிய அளவிலான ஆய்வுகளில் தமிழை தரம் தாழ்த்தும் செயல்பாடாகவும் இப்போக்கு அமைந்துவிடக்கூடிய அபாயம் இதனால் ஏற்படும் என்பதை மறக்கலாகாது!

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த ஆய்வு முயற்சியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் நூல் வடிவில் வெளியிடப்படும். அவை ஆய்வுலகில் ஈடுபடுவோருக்கு நிச்சயம் புதிய செய்திகளை வழங்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.







Thursday, September 6, 2018

92. நோர்வே - பயணமும் பார்வையும்



ஐரோப்பாவில் இன்னமும் இலையுதிர் காலம் தொடங்கவில்லை. ஐரோப்பா கண்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்கேண்டிநேவியன் நாடுகளுக்குச் சென்று சுற்றிப்பார்ப்பதற்குத் தோதான காலம் கோடைதான். சற்று மத்தியிலும் தெற்கிலும் உள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் சுட்டெரிக்கும் போது ஸ்கேண்டிநேவியன் நாடுகளான நோர்வே, சுவீடன் டென்மார்க் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் கோடை மிக இதமான தட்ப வெட்பத்துடன் அமைவதால் கோடைக்காலமே அயல்நாட்டினர் இந்த நாடுகளுக்குச் செல்ல மிகப் பொருத்தமான காலமாக அமைகின்றது. 

பாய்ந்துவரும் சிங்கம் போன்ற தோற்றத்துடன் உலக வரைபடத்தில் இடம்பெறும் நாடு நோர்வே. சில நாட்களுக்கு முன்னர் இதன் தலைநகரான ஓஸ்லோவில் ஒரு வரலாற்றுத் தேடுதல் பயணமாக சில நாட்களைக் கழித்து இந்த நாட்டைப் பற்றியும் இங்கு வாழும் தமிழ் மக்கள் பற்றியும் சில செய்திகள் சேகரித்து வந்தேன். 

ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு நோர்வே. நோர்வேஜியன் கடல் ஒரு புறமும் சுவீடன், பின்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளை நில எல்லைகளாகவும், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைக் கடல் எல்லையாகவும் கொண்டது நோர்வே. இந்த நாட்டைப் பற்றி குறிப்பாகச் சில செய்திகளைப் பார்ப்போம். 

நோர்வே நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக நோர்வேகியன் மொழியும் சாமி (வடக்குப் பகுதியில்) மொழியும் உள்ளன. இவை தவிர குவேன், ரொமானி, ரோமானுஸ் ஆகிய மொழிகளும் இங்கு சிறுபாண்மையினத்தோரின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. நோர்வேயின் அதிகாரப்பூர்வ மதம் சீர்திருத்த கிருத்தவ மதம் (லூத்தரன் ப்ரொட்டஸ்டன்). இங்கு மக்களாட்சியுடன் கூடிய பாராளுமன்றம் உள்ளது. அதிகாரப்பூர்வ மன்னராக இன்று 5ம் ஹரால்ட் இருக்கின்றார். 2ம் உலகப்போர் காலத்தில் ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்டு பின் 1945ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதல் சுதந்திர நாடாக இருக்கின்றது நோர்வே. டென்பார்க், சுவீடன் ஆகிய இரு நாடுகளின் கீழ் பல ஆண்டுகள் இருந்து பின்னர் ஜெர்மானிய படையின் தாக்குதலுக்கும் ஆட்பட்டு பின்னர் சுதந்திரம் பெற்றது நோர்வே. 


வறுமையான நாடுகளில் ஒன்றாக அறியப்பட்ட நோர்வே, கடந்த இரு நூற்றாண்டுகளில் அதன் எண்ணெய் வள கண்டுபிடிப்பினை அடுத்து மிகத் துரிதமாக வளமானதொரு நாடாக உருமாற்றம் பெற்றது. ஓஸ்லோ உலகின் விலையுயர்ந்த நகரங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. உணவு, உடைகள், பொருட்கள், தங்கும் விடுதிகள் என எல்லாமே இங்கு விலை அதிகமாகத்தான் இருக்கின்றது. இங்குப் பணப்புழக்கம் எனும் போது அதிகமாகக் காசுகளையும் பனத்தையும் மக்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக வங்கி அட்டைகளின் மூலமாகவே இங்கு எல்லா இடங்களிலும் விற்பனை நடக்கின்றது. இதே போன்ற நிலையைத்தான் டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளிலும் காண்கின்றோம். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழும் நோர்வேயின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய ஐந்து லட்சம் தான். இது வியப்பளிக்கலாம். ஆனால் இதே நிலையைத்தான் டென்மார்க், சுவீடன் போன்ற ஏனைய ஸ்கேன்டிநேவியன் நாடுகளிலும் காண்கின்றோம். 

நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இலங்கையில் தொடங்கிய யுத்தத்தின் போது தமிழ் மக்களில் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்தனர். அப்படிப் புலம்பெயர்ந்த நாடுகளில் நோர்வே நாடும் ஒன்று. இன்றைய நிலையில் ஏறக்குறைய இருபதாயிரம் தமிழர்கள் நோர்வே முழுமைக்கும் இருக்கலாம் என நான் அங்குள்ள தமிழ் நண்பர்களிடம் பேசியபோது அறிந்து கொண்டேன். தமிழர்களிலும் பெரும்பகுதியினர் நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலும் மற்றும் பெர்கன் நகரிலும் வாழ்கின்றனர். எனது பயணம் ஓஸ்லோவில் மட்டுமே என்பதால் அங்கிருக்கும் புராதன, வரலாற்றுச் சின்னங்கள் அருங்காட்சியகங்கள், தமிழர் அமைப்புக்கள் என்ற வகையிலேயே எனது பயணத்தில் நடவடிக்கைகள் அமைந்தன. 

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட நகர் ஓஸ்லோ. கி.பி 1040ம் ஆண்டு மன்னன் ஹரால்ட் ஹர்டாடாவினால் உருவாக்கப்பட்ட நகர் இது. நோர்வே நாட்டின் அரசு தொடர்பான முக்கிய அலுவல்களுக்கும் பொருளாதார தொடர்புகளுக்கும் முக்கியம் வாய்ந்த ஒரு நகர் ஓஸ்லோ தான். உலக நாடுகளில், மக்கள் வாழ்வதற்குச் சிறந்த ஒரு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நகரம் என்ற பெருமையும் ஓஸ்லோவிற்கு உண்டு. ஓஸ்லோ நகரில் மட்டும் 106 அருங்காட்சியகங்கள் உள்ளன. இங்குச் செல்வோருக்கு இதில் எந்த அருங்காட்சியகத்திற்குச் செல்வது என்பது குழப்பமான காரியம் தான். 

இதில் தவிர்க்கப்படக்கூடாத சில அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை நான் கட்டாயமாக்கிக் கொண்டேன். அதில் ஒன்றுதான் அமைதிக்கான நோபல் பரிசு மையம் (Nobel Peace Center). ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தான் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ம் தேதி உலக அமைதிக்காகச் செயலாற்றியோரில் சிறந்த சேவையாளருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஓஸ்லோ நகராண்மைக் கழக மண்டபத்தில் அந்தப் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெறுகிறது என்றாலும் அந்த நிகழ்வை ஒட்டி பரிசு பெறுபவரைச் சிறப்பிக்கும் நிகழ்வும் ஒரு ஆண்டு காலத்திற்கு அவரது செயல்பாட்டினைச் சிறப்பு செய்யும் கண்காட்சியும் இந்தக் கட்டிடத்தில் தான் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்தக் கட்டிடம் 2005 பழைய ரயில் நிலையத்தை மாற்றி அமைதிக்கான நோபல் பரிசினைச் சிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட நினைவு மண்டபமும் அருங்காட்சியகமுமாகும். 1901ம் ஆண்டு தொடங்கி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒவ்வொருவரைப் பற்றிய தகவல்களும் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டமைக்கான காரணங்களும் இங்கு வழங்கப்பட்டுள்ளன. 

நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபெல் அவர்களின் பெயரால் வழங்கப்படும் உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களுக்கும் சாதனை படைத்தோருக்கும் வழங்கப்படும் ஒரு உயரிய விருது. சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் பிறந்தவர் ஆல்ஃப்ரெட் நோபெல் . தனது மறைவுக்குப் பின்னர் அவரது உழைப்பில் ஈட்டிய சொத்துக்கள் அனைத்தும் ஒரு அறக்கட்டளையின் வழி திறன்படைத்த ஆய்வாளர்களைக் கவுரவிப்பதற்காகவும் சிறப்பிப்பதற்காகவும் என அவர் சட்டப்படி தமது உயிலை எழுதி வைத்தார். இதன் அடிப்படையில் 1901ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது சுவீடனிலும் நோர்வேயிலும் என இரண்டு நாடுகளில் வழங்கப் படுகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஓஸ்லோ நகரில் வழங்கப்படுகின்றது. அறிவியல், உளவியல், இலக்கியம், மருத்துவம் ஆகிய ஏனைய ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோம் நகரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர ஓஸ்லோவில் மிக முக்கியமாக அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களான ஃப்ரெம் அருங்காட்சியகம், வைக்கிங் அருங்காட்சியகம், மக்கள் அருங்காட்சியகம், கடலாய்வுகள் அருங்காட்சியகம் என சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குக் காட்சிப்படுத்தியிருந்த அரும்பொருட்களை காணும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். இதில் ஃப்ரெம் அருங்காட்சியகம் சிறப்பானது. ஏனெனில் உலகில் மனிதன் உலக உருண்டையின் வடக்கு தெற்கு துருவங்களுக்குச் சென்ற வரலாற்றுச் செய்திகளையும் நோர்வே ஆய்வாளர்களின் சிறப்பையும் அந்த ஆய்வுப் பயணங்களில் பயன்படுத்தப்பட்ட மரக்கலங்களையும் பாதுகாக்கும் ஒரு அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. 

நோர்வே நாட்டிற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழ்மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உள்ளூர் நோர்வேகியன் மொழியைக் கற்றுக் கொண்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஓஸ்லோ நகர மையத்தில் ஓடுகின்ற பேருந்துகளில் பேருந்து ஓட்டுநர்களாகவும், கட்டிடங்களில் காவல்துறை அதிகாரிகளாகவும், பாதுகாப்பு அதிகாரிகளாகவும் எனது சில நாள் பயணத்திலே பல தமிழர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவர்களின் இரண்டாம் தலைமுறையினர் உள்ளூரில் கல்வி கற்று சிறப்பான வளர்ச்சியைப் பெற்று நோர்வே நாட்டின் வளர்ச்சிக்குத் தங்கள் உழைப்பையும் தருகின்றார்கள் என்பதும் பாராட்டத்தக்கது. மிகச் சிறப்பாக மேலும் சொல்வதென்றால் ஓஸ்லோவின் துணை மேயராக இன்று பொறுப்பில் இருப்பவரும் ஒரு தமிழ்ப்பெந்தான். கம்சாயினி என்ற பெயர் கொண்ட இளம் ஈழத்தமிழ்ப்பெண் அரசியல் ஈடுபாட்டில் நாட்டம் கொண்டு நோர்வே நாட்டின் தலைநகரின் துணை மேயராக இருப்பது உலகத் தமிழர்களுக்குப் பெருமையல்லவா? 

இங்கு ஓஸ்லோ நகரில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள சூழலை அறிந்து வரும் வாய்ப்பும் அமைந்தது. ஓஸ்லோவில் மட்டும் ஐந்து தமிழ்ப்பள்ளிகள் இயங்குகின்றன. இவை ஐந்துமே அன்னை பூபதி என்ற ஒரு அமைப்பின் வழி நடத்தப்படுகின்றன. மேலும் பெர்கன் நகரிலும் இத்தகை தமிழ்ப்பள்ளிகள் இதே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் இங்குப் பள்ளிகள் இயங்குகின்றன. சொந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றிலேயே இயங்கும் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்குச் சென்று வந்தேன். அங்கு 650 மாணவர்கள் தமிழ் மொழி படிக்கின்றனர் என்பதைக் கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. 

ஓஸ்லோவில் மட்டுமே இரண்டு இந்துக் கோயில்களும் இருக்கின்றன. ஒரு சுப்பிரமணியர் கோவிலும் ஒரு அம்மன் கோவிலும் இருக்கின்றன. 

எனது ஓஸ்லோ வருகையை அறிந்து இணையம் வழி தொடர்பு கொண்டு நோர்வே தமிழ்ச்சங்கத்தினர் ஒரு மாலை நேரச் சந்திப்பிற்கு திடீர் அழைப்பினைத் தந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை மதியம் ஓஸ்லோ நகரில் இந்தச் சந்திப்பு ஒரு நால் ஏற்பாட்டில் நடைபெற்றது என்றாலும் ஆக்ககரமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நல்லதொரு தளமாக இந்தச் சந்திப்பு திகழ்ந்தது. 

ஐரோப்பா முழுமைக்கும் உள்ள பல்வேறு நாடுகளில் பல தமிழ்ச் சங்கங்களும் அமைப்புக்களும் இயக்கங்களும் இயங்குகின்றன. ஆனால் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து இயங்கும் வகையிலான ஒன்றியம் ஒன்று இது காறும் ஐரோப்பாவில் தோன்றவில்லை. உருவாக்கப்படவும் இல்லை. எதனால் இந்த முயற்சி தொடங்கப்படவில்லை என்ற கேள்வியை நான் முன் வைக்க இந்தத் தளம் பொறுத்தமானதாக எனக்கு அமைந்தது. இந்தச் சந்திப்பு நிகழ்விலேயே ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த தமிழ்ச்சங்கங்களின் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற என் கருத்தையும் விருப்பத்தையும் முன் வைத்தேன். இதனை நோர்வே தமிழ்ச்சங்கத்து செயலைவக் குழுவினர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அத்தகைய முயற்சியில் தங்களது ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்ததோடு இதில் இணைகின்ற முதல் அமைப்பாக நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பெயரை இணைக்குமாறு ஒருமித்த குரலில் என்னிடம் கேட்டுக் கொண்டனர். இதனை மிக ஆரோக்கியமானதொரு ஒத்துழைப்பாகவே நான் காண்கின்றேன். 

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தள்ளிவைத்து நமது அடுத்த தலைமுறையினர் ஐரோப்பாவில் ஊன்றிக் கால்பதித்து இங்கு வாழும் நிலையில் தமிழர் மரபு, மொழி, பண்பாட்டினை மறவாது இயங்க சீரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கலை, இசை, நடனம் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாத்திரம் ஐரோப்பியத் தமிழர்களின் ஆர்வத்தைக் குறுக்கிவிடாமல் பல்வேறு ஆய்வுத்தளங்களில் தமிழ்ச்சிந்தனைகள் பதிவாக்கம் பெறவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றைச் சரியாக ஆவணப்படுத்தவும் இது முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய ஒன்று என்பதை ஐரோப்பா வாழ் தமிழர்கள் மனதில் நிறுத்திச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!


Thursday, August 23, 2018

91. வரலாறு சொல்லும் தரங்கம்பாடி



German Tamilology (சி.மோகனவேலு) என்ற ஒரு நூல் சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நண்பர் ஒருவரின் வழி பரிசாகக் கிடைத்தது. வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என அதனை வாசிக்கத் தொடங்கினேன். நாம் பொதுவாக பேசாத, அறியாத பல வரலாற்றுத் தகவல்கள் அந்த நூலில் இடம்பெற்றிருந்தன. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குச் சென்ற ஐரோப்பியர்கள் பற்றியும் அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணிகள், கல்விப்பணிகள், மருத்துவப் பணிகள் பற்றியும் பல தகவல்களை அந்த நூல் கோடிட்டுக் காட்டியிருந்தது. இந்த நூல் வாசிப்பின் தொடர்ச்சியாக மேலும் பல நூல்களை வாங்கியும், இணையத்திலிருந்து தரவிறக்கியும், வாசிக்கத்தொடங்கியிருந்தேன். பல ஆய்வுக்கட்டுரைகளும் இந்த விசயம் தொடர்பாக எனது இடைவிடாத தேடல்களில் கிடைக்கப்பெற்றேன். இந்த ஆய்வின் வழி பல்வேறு காலகட்டங்களில் ஐரோப்பாவிற்கும் தமிழகத்திற்கும் இருந்த தொடர்புகள் பற்றியும் அவை வணிகம், சமயம், நாட்டைக் கைப்பற்றி ஆளும் முயற்சி என்ற வகையிலுமான வரலாற்றுச் செய்திகள் பல எனக்குக் கிடைத்தன. இப்படிக் கிடைத்த நூல்களிலும் கட்டுரைகளும் குறிப்பிடப்படும் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்தின் ஒரு நகரின் பெயராக தரங்கம்பாடி என்ற கடற்கரை நகரின் பெயர் எனக்கு அறிமுகமாகியது.

ஐரோப்பாவின் ஜெர்மனி, டென்மார் ஆகிய இந்த இரு நாடுகளுக்கும் தமிழகத்தின் இந்தக் குறிப்பிட்ட தரங்கம்பாடி என்ற நகருக்கும் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் தொடர்புகள் இருக்கின்றன என்பதை எனது தேடல்களின் வழி அறிந்து கொண்டேன். இவ்வளவு வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டிருக்கும் இந்த தரங்கம்பாடி என்னும் நகருக்குச் சென்று நேரில் இந்த நகரைக் கண்டு ஆராய வேண்டும், இந்த நகரைப் பற்றில் நேரடி அனுபவம் பெறவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. ஆயினும் சில ஆண்டுகள் இந்த முயற்சி தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது. 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வடலூருக்கு ஒரு களப்பணிக்காக நான் சென்றிருந்தபோது இந்த நகருக்குச் செல்லும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன்.

என்னுடைய தரங்கம்பாடி பயணத்தில் வடலூர் நண்பர்கள் சிலரும் இணைந்து கொண்டனர். எங்கள் பயணம் வடலூரிலிருந்து தொடங்கியது. வடலூரிலிருந்து தரங்கம்பாடிக்கு ஏறக்குறைய என்பது கிமீ தூரம். வடலூரிலிருந்து புறப்பட்டு சாத்தப்பாடி, புவனகிரி, சிதம்பரம், சிவபுரி, சீர்காழி, திருக்கடையூர், சாத்தங்குடி ஆகிய ஊர்களைக் கடந்து தரங்கம்பாடி வந்தடைந்தோம். வழியில் எங்கள் பயணத்தில் பெருமாள் ஏரியைக் கடந்து பின்னர் கொள்ளிடம் நதியைக் கண்டு ரசித்தவாறே எங்கள் பயணம் அமைந்தது. தரங்கம்பாடியிலிருந்து வடக்கு நோக்கி கடற்கரையோரத்தில் பயணம் செய்தால் இலக்கிய காலத்திலிருந்து நாம் நன்கறிந்த பூம்புகார் நகரை வந்தடையலாம். தரங்கம்பாடியிலிருந்து பூம்புகார் ஏறக்குறைய 25 கி.மீ தூரம் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை நகரம்.

தமிழகத்தில் உள்ள இந்தத் தரங்கம்பாடி என்னும் கடற்கரை நகரத்திற்கும் ஐரோப்பாவின் டென்மார்க்கிற்கும் ஜெர்மனிக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவாரசியமான வரலாறு.

ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தமிழகத்தின் தரங்கம்பாடியில் தான். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை துறைமுகமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.

லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் ஜெர்மானியரான பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். தரங்கம்பாடியில் ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு ஒரு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் கி.பி18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் இன்று பாதுகாக்கப்படுகின்றன.

1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்குத் தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார்.

1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சையை அச்சமயம் ஆண்டு கொண்டிருந்த அச்சுதநாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் டென்ஸ்போர்க் கோட்டை இங்கு அமைக்கப்பட்டது

1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது.

வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு அப்பகுதியில் வர்த்தகம் நடத்திக்கொண்டிருந்த போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை.

டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன. வணிகம் செழித்த ஒரு பகுதியாக இப்பகுதி சங்க கால இலக்கியங்களின் குறிப்புக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்பது இந்த நகரின் சிறப்பை விளக்கும் வகையில் அமைகின்றது.

இங்கு டேனீஷ் கோட்டைக்கு வருபர்கள் அதன் இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயிலைக் காணலாம். இக்கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது.

அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினென் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது.

1712ம் ஆண்டு சீகன்பால்க் உருவாக்கிய தரங்கம்பாடி அச்சுக்கூடம் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. காலணித்துவ ஆட்சியின் போது படிப்படியாக அச்சு நூல்கள் உலகமெங்கும் உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழகத்தில் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடம் இயங்கியது என்பது சிறப்பல்லவா?

இங்கிலாந்தில் இயங்கி வந்த லூத்தரன் சமய அமைப்பு பாதிரியார் சீகன்பால்கின் பணிகளுக்கு உதவும் வகையில் ஜெர்மனியிலிருந்து ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி 1711ம் ஆண்டு கப்பலில் அனுப்பியது. அக்கப்பல் பிரஞ்சுக்கடற்படையால் தாக்கிக் கைப்பற்றப்பட்டு சிலகாலங்களுக்குப் பின் அக்கப்பலும் அதில் பயணித்தோரும் விடுவிக்கப்பட்டு தரங்கம்பாடிக்கு 1712ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்தடைந்தது. இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தின் முதல் வெளியீடாக ஹாலே கல்விக்கூடத்து தலைமை இயக்குநர் பேராசிரியர் ஃப்ராங்கே அவர்களின் நூல் போர்த்துக்கீசிய மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளிவந்தது. அடுத்ததாக 1713ம் ஆண்டில் மேலும் சில கிருத்துவ சமய சார்பு நூல்கள் போர்த்துக்கீசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தத் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன. தமிழ் மொழியில் இந்த அச்சுக்கூடம் இயங்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் உணர்ந்ததால் தமிழ் அச்சு எழுத்துகள் உருவாக்கும் பணி ஜெர்மனியில் தொடங்கியது. சீகன்பால்க் அவர்கள் உருவாக்கியிருந்த லத்தீன்-தமிழ் இலக்கண நூலின் வழி தாங்கள் அறிந்து கொண்ட தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இப்பணி தொடங்கப்பட்டு தமிழ் அச்செழுத்து உருவாக்கம் நிறைவு பெற்றது. புதிதாக உருவாக்கிய அச்சு எழுத்துக்களையும் ஒரு புதிய அச்சு இயந்திரத்தையும் கப்பல் வழி தரங்கம்பாடிக்கு ஹாலே கல்வி நிறுவனம் அனுப்பியது. இந்த முயற்சியின் வழி சீகன்பால்க் தொடங்கிய தரங்கம்பாடி அச்சகம் தமிழில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. வீரமாமுனிவர் என நன்கு அறியப்பட்ட C.J.Beschi அவர்கள் இந்த அச்சுக்கூடம் வந்தார் என்றும் அவரது நூல்களும் இங்கு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பல வரலாற்றுச் செய்திகளைத் தன்னுள்ளே கொண்டு இன்று பெரிதும் பேசப்படாத ஒரு நகராக தரங்கம்பாடி திகழ்வது ஆச்சரியம்தான். இப்பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள், மாசிலாமணீஸ்வரர் ஆலயம், டேன்ஸ்பூர்க் கோட்டை என இந்த நகரில் பார்ப்பதற்கு ஏராளமானவை உள்ளன. இதனை வெளிப்ப்டஹ்ட்தும் வகையில் தமிழுக்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள தொடர்பினை வெளிக்காட்டும் வகையிலான ஒரு விழியப் பதிவை அண்மையில் தமிழ் மரபு அறக்கட்டளை வ்ளியீடு செய்திருந்தோம். அதனை https://youtu.be/FM6Wmzkrjmc என்ற பக்கத்திலிருந்து கண்டு மகிழலாம்.

நூல்கள் மட்டும் நமக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுப்பதில்லை. நகரங்களும் நம்மோடு வரலாறு பேசக்கூடிய வல்லமை பெற்றவையே!






Thursday, August 16, 2018

90. கல்லிலே கலைவண்ணம் - திருச்சி குடைவரைக்கோவில்



மலேசியாவிலிருந்து தமிழகம் செல்ல விரும்புவோருக்குத் தற்சமயம் சென்னை மட்டுமன்றி மதுரைக்கும் திருச்சிக்கும் விமான சேவைகள் கோலாலம்பூரிலிருந்தும் பினாங்கிலிருந்தும் கிடைக்கின்றன. திருச்சிக்குச் செல்லும் மலேசியத்தமிழர்களில் பெரும்பாலோர் தவறாமல் செல்வது திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலும் ஸ்ரீரங்கம் கோவிலும் தான். காவேரி பாயும் திருச்சியிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நாம் கண்டு மகிழவும் அறிந்து கொள்ளவும் ஏராளமான வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் உண்டு.

இன்று நாம் திருச்சி என அழைக்கும் இந்த ஊர் தேவாரப்பாடல்களில் சிராப்பள்ளி எனக் குறிப்பிடப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்புக்கள் மிகைந்து கிடப்பதாலோ என்னவோ திருச்சிராப்பள்ளி எனச் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது இந்த நகர். பள்ளி என்ற சொல், சமண பின்புலத்தைக் காட்டும் குறியீட்டுச் சொல். இங்கு பண்டைய காலத்தில் சமண கல்விக்கூடங்கள் நிறைந்திருந்தன. திருச்சி புனிதவளனார் கல்லூரியில் துணை நூலகராகப் பணியாற்றிய அ.ஜெயக்குமார் அவர்கள் தமது சரித்திரம் சந்தித்த திருச்சிராப்பள்ளி என்ற கட்டுரையில் 'சிரா என்ற பெயர்கொண்ட சமண முனிவர் இங்கு வாழ்ந்து பள்ளி அமைத்து சேவையாற்றி வந்தார்' எனக்குறிப்பிடுகின்றார். இதே கட்டுரையில் 'சிராப்பள்ளி என்பது சிரா என்ற சமண முனிவர் வாழ்ந்த ஒரு தவப்பள்ளியாக இருந்தது என்றும், பின் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (கி.பி.600-630) அதை இடிக்க வைத்து அந்த இடத்தில் சிவன் கோவில் ஒன்றை எழுப்பினான் என்றும் அது சிராப்பள்ளி என அழைக்கப்பட்டதென்றும், அக்கோயிலின் பெயரே பின் நகரத்தின் பெயராகவும் அழைக்கப்பட்டதென்றும்' வரலாற்றிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் குறிப்பிடுவதையும் காண்கின்றோம். (நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி, 2002)

திருச்சிராப்பள்ளி பாண்டிய, சோழ, பல்லவ, ஹோய்சாள, விஜயநகர மன்னர்களாலும் பின்னர் முகம்மதிய நவாப்புகளாலும், அதன் பின்னர் ஆங்கிலேயர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட நகரம். இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகத் திகழும் திருச்சி முன்னர் சிறியதொரு நகரமாகவே காணப்பட்டது. இன்று அறியப்படாத சிறு நகராக உருமாறியிருக்கும் உறையூர் தான் முன்னர் பெரிதும் அறியப்பட்ட ஒரு நகரமாக இருந்தது.   பிற்கால சோழ மன்னர்களில் சோழன் விஜயாலயன் காலம் வரை உறையூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து சோழ மன்னர்கள்  தஞ்சாவூர், பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம் என தமது தலைநகரங்களை மாற்றிக் கொண்டனர் என்பது வரலாறு. இந்த வரலாற்றுப் பெறும் சிறப்புக்களை இழந்து போன நகரமாக இன்று உறையூர் மாறிய சூழலில் அதன் அருகாமையில் இருக்கும் திருச்சி இன்று மாபெரும் நகரமாக வளர்ச்சி கண்டிருக்கின்றது.

இன்று நாம் தமிழகத்தில் காண்கின்ற கோயில் கட்டுமான அமைப்பிற்கு முன்னோடியாக இருப்பது குடைவரைக் கோயில்கள் எனலாம். இதற்கு முன்னர் மண்ணினாலும், மரத்தாலும், விரைவில் அழிந்து போகக்கூடிய வேறு பொருட்களினாலும் உருவாக்கப்பட்ட கோயில்கள் விரைவில் சேதப்படுவதற்கு ஒரு மாற்றாக குடைவரைக்கோயில்கள் எனும் அமைப்பு தமிழகத்தில் கி.பி 6 முதல் உருவாகத் தொடங்கியது எனலாம். அவ்வகையில் திருச்சியில் உள்ள கோயில்களில் குடைவரைக்கோயில்கள் என எடுத்துக் கொண்டால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஐந்து குடைவரைக்கோயில்கள் இருக்கின்றன. இரண்டு குடைவரைகள் மலைக்கோட்டை குன்று பகுதியிலும், இரண்டு திருவெள்ளரையிலும் ஒன்று திருப்பைஞ்ஞீலியிலும் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு குடைவரைக்கோயிலைப்பற்றியதுதான் இக்கட்டுரை.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சி மலைக்கோட்டை. இது ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் இந்தக் குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது.

இந்த வீதிக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தெரு எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்து வளர்ந்த ஊர் இது என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதே சாலையில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான மௌனமடம் ஒன்று இருக்கின்றது. இந்தத் தெருவில் வரும் போது குறுக்கு வீதி ஒன்று வரும். அது பல்லவர் குகைக்கோயில் தெரு, மலைக்கோட்டை, 11வது வார்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வீதியில் தொடர்ந்து நடந்தால் மலைக்கோட்டைப் பாறையின் சரிவில் இடதுபுறத்தில் இக்குடைவரைக் கோயிலைக் காணலாம்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு குடைவரைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.

கீழேயுள்ள இக்குடைவரைக்கோயில் அளவில் பெரியது. இந்தியத் தொல்லியல் துறை இது பல்லவன் மாமல்லன் காலத்துக் கோயில் எனக்குறிப்பிடுகின்றது. இது பாண்டியர் காலத்துக் குடைவரை என சில ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். அனேகமாக இக்குடைவரைக் கோயில் நரசிம்மபல்லவன் காலத்து கலைப்பாணியாக இருக்கலாம் என்றும் கருதலாம்.

குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவறையின் முன் வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேல் வரிசையாகப் பூதகணங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுற கருவறையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.

கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவரை அமைந்திருக்கின்றது. இச்சிற்பங்களில் சிலவற்றின் முகப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்தக் குடைவரைக் கோவிலில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இக்குடைவரையில் இருக்கும் கொற்றவை அல்லது துர்க்கையின் உருவம் முழுமைபெறாத வடிவில் உள்ளது. நான்கு கரங்களுடன் கொற்றவை காட்சி தருகின்றார். கொற்றவையின் பாதத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும், அதில் ஒருவர் தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டும் மறு கரத்தால் கழுத்தை வாளால் வெட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இது கொற்றவைக்குத் தன்னை வீரன் ஒருவன் பலி கொடுத்துக் கொள்ளும் காட்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வகை நவகண்ட சிற்பங்கள் குடைவரை கோயிலிற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இதனை அடுத்து கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒளிவட்டத்துடன் கூடிய சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம், கழுத்தணி என ஆபரணங்களுடன் இச்சிற்பம் உள்ளது. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இச்சிற்பம் உள்ளது . தனது ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியவண்னமும் மறு கரத்தில் அக்க மாலையை ஏந்தியவண்ணமும் இச்சிற்பம் அமைந்திருப்பது சிறப்பு.

னெடிய புடைப்புச் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த இக்குடைவரைக் கோயிலைப் பற்றிய ஒரு பதிவினைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுல்ளோம். அதனை https://youtu.be/7BfeC3NjW54 என்ற இணைய முகவரியில் காணலாம்.

தமிழகக் கோயிற் கலையில் குடைவரைக் கோயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. கற்றளிகள் உருவாக்கப்படுவதற்கு முன் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட இத்தகைய கோயில்கள் பல இன்றும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன. பல்லவர்களும் பாண்டியர்களும் எடுப்பித்துப் போற்றிப்பாதுகாத்த இத்தகைய கலைக்கோயில்கள் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புக்களாகும். இத்தகைய குடைவரைக்கோயில்களில் வழிபாட்டில் உள்ள கோயில்களில் சில பாதுகாப்பான சூழலில் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.










Wednesday, August 1, 2018

89. டல்லாஸ் நகரில் தமிழுக்குத் திருவிழா



டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 31வது விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்று பின் வாஷிங்டன் டிசி, மேரிலாண்ட், விர்ஜீனியா ஆகிய பகுதிகளிலும் தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 10ம் தேதி வரை எனக்கு அமைந்தது.

தமிழுக்குத் திருவிழாக்கள் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் எல்லா நாடுகளிலும் நடப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பு. இந்த விழாக்களில் தனித்துவமும் மிகுந்த சிறப்பும் கொண்டது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பேரவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து நடத்தி வரும் பேரவை விழா. அந்த வகையில், இவ்வாண்டு பேரவையின் 31ம் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாக, தமிழர் பெருமை கொள்ளும் வகையில் நடந்து முடிந்துள்ளது.

2016ம் ஆண்டுக்குப் பின்னர் 2ம் முறையாகத் தமிழ மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் எமது தொடர் முயற்சிகளைப் பற்றியும் இந்த 31வது பேரவை விழாவில் உரையாற்ற எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை மகிழ்வுடனும் பெருமையுடனும் நினைத்துப் பார்க்கின்றேன். எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் மீது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை கொண்டிருக்கும் அன்பும்
நம்பிக்கையும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த ஆண்டு பேரவை விழா தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வின்றி, ”மரபு, மகளிர், மழலை” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

நிகழ்வின் மைய அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோயிலின் வடிவம், மாநாடு நடைபெற்ற அரங்கில் நடுநாயகமாகத் திகழ்ந்தது. இதனை உருவாக்க விழா ஏற்பாட்டுக் குழுவினர் அளித்த உழைப்பை நன்றி கூறி பாராட்டுவது தகும். இந்தக் கோயில் மாநாட்டு நிகழ்வுக்குப் பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் திரு.கண்ணப்பன் உருவாக்கியிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலை நாகரிகத்தில் மூழ்கி தமிழையும் தமிழ் பண்பாட்டையும் மறந்து விட்டனர் என்ற மேம்போக்கான கூற்றினைப் பொய்யாக்கி, தமிழ் செழிப்புடனும் வளமுடனும் வாழ்கின்ற இடங்களில் அமெரிக்காவிற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று பறைசாற்றியது இந்தப் பேரவையின் தமிழ்த்திருவிழா.

பேரவையின் மாநாடு, அமெரிக்கத் தமிழர்களின் தொழில்நுட்ப ஈடுபாடு, அதில் தமிழ் மக்களின் வெற்றிப்பாதைகள், முயற்சிகள் என்பனவற்றை விவரிக்கும் வகையில் தொடங்கியது. பின் மாலை நேர மாபெரும் விருந்து. பின்னர் அதனைத் தொடர்ந்த அடுத்த இரு தினங்கள் தமிழ் மொழி, கலை, வரலாறு, பண்பாடு, சமூகம் என்ற வகையில் தன் பார்வையைக் குவிப்பதாக அமைந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கிலும் சரி, பின்னர் மாலையில் தொடங்கப்பட்ட விருந்து நேரப் படைப்புக்கள், மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கிய சிறார்கள், உச்சரிப்புச் சிறப்புடன் பேசி தமது திறனை நன்கு வெளிப்படுத்தினர். அடுத்த தலைமுறையைச் சரியாக உருவாக்குவதுதான் இந்தத் தலைமுறையின் தலையாய கடமை என்பதற்குச் சான்றாக இது அமைந்தது.

மாலை நேர விருந்து தொடங்கி ஒவ்வொரு நாள் உணவும் தமிழர் கலாச்சார உணவாக அமைந்திருந்தது. மாநாடு நடைபெற்ற அரங்கில் எட்டு இடங்களில் உணவு வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையைச் சற்று சமாளிக்கக்கூடியதாகவே இருந்தது. சுவையான உணவினைத் திறமையாக வழங்கிய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.

பல அமர்வுகள் ஒரே நேரத்தில் அமைந்திருந்தன. 'எந்த அமர்விற்குச் செல்வது எதனை விடுவது?' என்பது தான் எனக்குப் பிரச்சனையாகிப் போனது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்திற்கும் தொடர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பான அமர்வுகளில் நானும் கலந்து கொண்டேன். பல புதிய செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணை
அமர்வுகள் எனக்கு உதவின.

மாநாட்டின் ஆரம்ப நாள் தொடங்கி நிகழ்ச்சியில் பறையோசை கேட்டுக் கொண்டிருந்தது. ஆடாத கால்களையும் ஆட வைக்கும் தன்மைகொண்டது அல்லவா பறையிசையும் நடனமும். மேலும் பரதக்கலையில் சிறந்த கலைஞரான நர்த்தகி நடராஜனையும் வரவழைத்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருந்தனர் பேரவை ஏற்பாட்டுக் குழுவினர். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கூத்துக் கலை, நாடகம் என தமிழர் கலைவளத்தின் பல பரிமாணங்களை வந்திருந்தோர் கண்டு மகிழ்ந்தோம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு வெற்றியடைந்ததைப் பாராட்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக, கனடா டொரொண்ட்டொ, போஸ்டன், ஹூஸ்டன் என தொடரவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு நிகழ்வும் பயனுள்ளதாக அமைந்தது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாடுகள், பேரவையின் 32வது விழா பற்றிய கலந்துரையாடல் என்பன பயனளிப்பதாக அமைந்தன. அரசியல் கலப்பின்றியும் தலையீடு இன்றியும் இது நடைபெறும் என பேரா.மருதநாயகம் இந்த வரவிருக்கும் மாநாடு பற்றி கூறியது வரவேற்கத்தக்க ஒன்று. இங்கு மட்டுமல்ல, பொதுவாகவே தமிழ் ஆய்வு மாநாடுகளில் அரசியல் அமைப்புக்களின் ‘மரியாதை நிமித்த’ தலையீடுகளைத் தவிர்ப்பதே சாலப் பொருந்தும். தமிழ் ஆய்வுக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் ஆய்வாளர்களால், ஆய்வு நோக்கத்தோடு மட்டுமே முன்னெடுக்கப்படும் முயற்சிகள் உலகெங்கும் பெறுக வேண்டும்.

நெசவாளர்களின் மனிதகுலத்திற்கான பங்களிப்பான கைத்தறி தயாரிப்புகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக எனது முதல் நிகழ்ச்சி இந்தப் பேரவை விழாவின் விருந்து நிகழ்ச்சியில் அரங்கேறியது. கைத்தறி தமிழர் உலகிற்கு அளித்த பண்பாட்டுச் சிறப்பு என்பதோடு ஆசிய நாடுகள் எங்கும் தமிழக நெசவுத் தொழில்நுட்பமே பரவியது என்பதையும் இந்த நிகழ்வில் வலியுறுத்த எனக்கு வாய்ப்பு அமைந்தது. அதனை அடுத்து தற்செயலாக ஏற்பாடாகிய ஒரு அமர்வில் தமிழகத்தில் இஸ்லாமிய மரபுகளின் வரலாற்றுப் பதிவுகள் பற்றிய உரையை வழங்கினேன். பேரவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய இணை அமர்வில் தமிழ் ஆவணப் பாதுகாப்பிற்கான அவசியம் பற்றி வந்திருந்த ஆர்வலர்களோடு பேச வாய்ப்பமைந்தது.

ஏராளமான பேஸ்புக் நண்பர்களை நேரில் பார்த்து அறிமுகம் செய்து கொண்டதும், கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களில் சந்தித்த நண்பர்கள், உலகின் ஏனைய நாடுகளில் தமிழ்ப்பணி ஆற்றும் தமிழார்வலர்களையும் சந்தித்தது போன்ற நிகழ்வுகள் குடும்ப உறவுகளைச் சந்தித்தது போன்ற மனமகிழ்ச்சி அளித்தது. பல புதிய நண்பர்களை எனக்கு இந்தப் பேரவை விழா உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. என்னைப் போலவே வந்திருந்த பலரும் உரையாடி மகிழ்ந்த காட்சிகளை ஆங்காங்கே காண முடிந்தது.

மாலை நேர இசை நிகழ்ச்சிகளைப் பாடகர் கார்த்திக்கும் ஏனைய தமிழ்த்திரையுலக கலைஞர்களும் பிரமாண்டமாக்கினார்கள், ஏறக்குறைய 5500 பேர் கலந்து கொண்டதால் அரங்கமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காட்சியளித்தது.

இவ்வாண்டும் 31வது பேரவை விழாவை வெற்றிகரமான ஒரு விழாவாக ஆக்கியமையில் பெரும் பங்கு இந்த ஏற்பாட்டுக் குழுவையே சாரும். இக்குழுவிற்குத் தலைமையேற்ற திரு.கால்ட்வெல் மற்றும் அவரது குழுவினருக்கும், கடந்த ஆண்டு பேரவையின் தலைமைப் பொறுப்பேற்ற திருமதி செந்தாமரை, திரு.நாஞ்சில் பீட்டர் ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன். தமிழ் மரபு அறக்கட்டளையோடு இணைந்து கைத்தறி நெசவுக்கலை நிகழ்ச்சிக்காகக் கடுமையாக உழைத்த அனைத்து சகோதரிகள், கைத்தறி அணிவகுப்பில் கலந்து கொண்ட இளம் பெண்கள் அனைவரது ஒத்துழைப்பும் பாராட்டுதலுக்குரியது. பேரவை ஏற்பாட்டுக் குழுவின் பல்வேறு குழுக்களில் பணியாற்றிய தன்னார்வத்தொண்டர்கள் பல நாட்கள் இரவு பகல் எனப்பாராது இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் பதிகின்றேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு, ஆவணப்பாதுகாப்பு, நடவடிக்கைகளும் வெளியீடுகளும் வழக்கம் போல் தொடரும். அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும், அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள பேரவையின் 32வது விழாவிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் தமிழ் முயற்சிகளை வாழ்த்துவோம்!






Monday, May 28, 2018

88. உலகத் தமிழர் மாநாடு - கம்போடியா



முதலாம் உலகத் தமிழர் மாநாடு கம்போடியா நாட்டில் நடந்து வெற்றித் திருவிழாவாக அமைந்ததில் உலகத் தமிழர் பெருமை கொள்ளத்தான் வேண்டும். ஒரு அரசால், ஒரு அமைப்பால், ஒரு சங்கத்தால், ஒரு கல்விக்கழகத்தால் மாநாடுகள் கூட்டப்படுவதுதான் இயல்பு. ஆனால் இதற்கு மாற்றாக, வாட்சப் எனும் கைத்தொலைப்பேசி கணினி தொழில்நுட்பத்தின் துணையுடன், ஐவர் இணைந்து, தமிழ் உலகில் வணிகர்களாகவும், சமூக சேவையாளர்களாகவும், கல்வியாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், ஆய்வாளர்களாகவும் செயல்பட்டு வருவோரை இனைத்து இந்த மாநாட்டினைச் செய்து முடித்திருக்கின்றார்கள். இந்த மாநாட்டுக்கான அடிப்படை கருத்தினை உருவாக்கி இயக்கிய ஐவர் - ஒரிசா பாலு, திரு.சீனிவாசராவ், திரு.ஞானம், திருமதி தாமரை சீனிவாசராவ், மருத்துவர் க.தணிகாசலம் மற்றும் அவர்களோடு கம்போடிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ராமசாமி ஆகியோர். இந்த மாபெரும் கருத்துக்கு உயிர்கொடுத்து செயல்படுத்திய இந்த ஐவரைப் பாராட்டி வாழ்த்துவது உலகத் தமிழரின் கடமையாகும்.

இந்த மாநாடு குறிப்பாக இரண்டு பெரும் துறைகளில் தன் கவனத்தைச் செலுத்தும் வகையில் அமைந்திருந்தது. மே மாதம் 19ம் தேதி அமர்வுகளும் மே மாதம் 20ம் தேதி அமர்வுகளுமாக இரண்டு நாட்கள் உரை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கம்போடிய அரசின் முழு ஒத்துழைப்பு இந்த மாநாட்டிற்கு இருந்தது என்பது பெருமைப்பட வைக்கின்றது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கம்போடிய நாட்டின் செயலாளர் மாண்புமிகு சாவ் சிவோன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைக் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அவருடன் கம்போடிய அரசின் கல்வி அமைச்சின் துணைச்செயலாளர் மாண்புமிகு பாவ் சோம்செரெ, கம்போடிய அரசின் கனிமவளம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் முதன்மை இயக்குநர் மாண்புமிகு விக்டர் ஜோனா, கம்போடிய அரசின் சியாம் ரீப் மாவட்ட துணை ஆளுநர் மாண்புமிகு தியா செய்ஹா ஆகியோரும் கலந்து நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தனர்.

தமிழ்த்திரையுலகின் பிரபலங்களான திரு.சரத்குமார் இந்த நிகழ்வில் ஒரு தமிழ் உணர்வாளராகக் கலந்து சிறப்பித்தார். அவருடன் தமிழ்ச்சினிமா இயக்குநர் திரு.தங்கர்பச்சான், தெருக்கூத்து கலைஞரும் திரைப்பட இயக்குநருமாகிய சங்ககிரி ராஜ்குமார் மற்றும் அவரது தெருக்கூத்துக் கலைஞர்களும் கலந்து நிகழ்ச்சிக்கு மேலும் சுவை கூட்டினர்.

இன்றைய கணக்கெடுப்பின் படி உலக நாடுகளின் எண்ணிக்கை 195 ஆகும். இதில் ஏறக்குறைய 160க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று தமிழர் வாழ்கின்றனர் என்பதற்கான தரவுகள் நமக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. தமிழர்கள் காலம் காலமாக கடலில் தூர பயணம் மேற்கொண்டு பல புதிய நாடுகளைக் கண்டு அங்கு வாழ்ந்தும் பெயர்ந்தும் தன் சுவடுகளைப் பதிந்திருக்கின்றனர். கடலைக் கண்டு அஞ்சும் பண்பு தமிழர்களுக்கில்லை. எல்லைகளற்ற நிலப்பரப்பிற்குச் சொந்தக்காரர்களாகத் தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர்கள் தமிழர்கள்.

முன்னர் தமிழர் வாழ்கின்ற நாடுகள் என்றால் அவை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கை பர்மா என்று மட்டுமே நம் சிந்தனை செல்லும். இன்றோ நிலமை மாறிவிட்டது. ஆசிய கண்டத்தைத் தவிர்த்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மற்றும் அமெரிக்க கண்டங்களில் இன்று வாழ்கின்றனர். தைவான், வியட்னாம், சீனா, கம்போடியா, மொரிஷியஸ், அந்தமான், நிக்கோபார் தீவுகள் மட்டுமல்ல; வரைபடத்தில் தேடினால் மட்டுமே கிடைக்கக்கூடிய கூடலப், மார்ட்டினிக், பாப்புவா நியூ கினி போன்ற தீவுக் கூட்டங்களிலும் தமிழர் வாழ்கின்றனர் என்பதை இந்த மாநாடு நிரூபித்தது. பாப்புவா நியூ கினி நாட்டின் ஆளுநரின் துணைவியார் மாண்புமிகு சுபா அபர்ணாவின் வருகை இந்த மாநாட்டிற்குப் புத்துணர்ச்சி கொடுப்பதாகவே அமைந்தது.

இந்த மாநாட்டில் தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு, சமூகவியல் தொடர்புகளான ஆய்வுகள் பற்றிய உரைகள் முதல் நாள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் நிகழ்வு முற்றும் முழுவதுமாக தமிழர் வணிகம் பற்றியதாக அமைந்தது. இது தமிழ் உலகிற்கு ஒரு புதிய முயற்சி என்றே கூறலாம். வெவேறு தளங்களில் இயங்கும் வர்த்தகத்துறையினர், அதிலும் தமிழர்கள், தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகளை விளக்கி எவ்வாறு ஏனைய தமிழர்களும் இத்தகைய வணிக முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என புதிய செய்திகளை வழங்கிச் சென்றனர். எல்லோருக்குமே தம் கருத்துக்களைப் பேசுவதற்குக் கொடுக்கப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருந்தது என்றாலும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் கருத்துக்களைச் சொல்லி உலகளாவிய தமிழர்களின் செயல்பாடுகளைப் பதிந்த ஒரு சிறப்பு மிக்க நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது.

இந்த மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளை திரு.ஒரிசா பாலசுப்பிரமணி அவர்களை “தமிழ்க்கடலோடி” என்ற விருதளித்து பொன்னாடை போர்த்தி சிறப்பித்து வாழ்த்தினோம். தனது இடைவிடாத முயற்சிகளினாலும், தொடர்ந்த பயணங்களினாலும் உலகின் பல மூலைகளில் வாழும் தமிழ் மக்களின் திறனைக் கண்டறிவது, அவர்களை வாட்சப் குழுமத்தின் வழி ஒன்றிணைப்பது எனச் செயல்பட்டு வருபவர் இவர். கடல் வழி பயணத்தினூடாக பண்டைய தமிழர் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று திரைமீளர்களாகத் திகழ்ந்தனர் என்ற செய்தியை தொடர்ந்து கூறி இளம் சமுதாயத்தினரிடையே புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டி வரும் சிறந்த பண்பாளர் திரு.ஒரிசா பாலுவை இந்த நிகழ்வில் கவுரவிப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொண்டோம்.

தனது நெடுநாளைய அரசுப்பணி அனுபவம், ஆழ்ந்த தமிழ்ப்புலமை, சிறந்த வர்த்தக மேளாண்மைத்துறை அனுபவங்களின் வெளிப்பாடாக இருநாட்கள் மாநாட்டிலும் தனது கருத்துக்களால் சிந்தனைக்கு விருந்தளித்தவர் திரு.பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காகப் பல வழிகளில் சேயையாற்றிய நற்பண்பாளர். திருக்குறள் உலகப்பொதுமறை என்ற கருத்தை தனது ஆழ்ந்த தமிழறிவினாலும் சமூக நலச்சிந்தனையினாலும் தமிழ் மக்கள் அறிந்து மேம்பட தொடர்ந்து கூறிவரும் இவரது பங்கெடுப்பு இந்த மாநாட்டிற்கு வளத்தைச் சேர்த்தது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகம் தழுவிய தமிழ் ஓலைச்சுவடி, கல்வெட்டு மற்றும் பழம் ஆவணப் பதிவு முயற்சிகள் பற்றியதாக இந்த மாநாட்டில் எனது உரை அமைந்திருந்தது. தமிழகம் மட்டுமன்றி, மலேசியா, ஐரோப்பாவின் குறிப்பிட்ட சில நாடுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை இதுகாறும் நிகழ்த்தியுள்ள ஆவணப்பாதுகாப்பு மற்றும் மின்னாக்க முயற்சிகள் பற்றி எனது உரையில் குறிப்பிட்டேன். இன்னும் ஏராளமான ஓலைச்சுவடிகள் தனியார் வசமும், ஆவணப்பாதுகாப்பகங்களிலும் உள்ளமையை விவரித்து இவை வாசிக்கப்பட்டு இவற்றில் உள்ள செய்திகள் தமிழ் மக்கள் பார்வைக்குக் கொண்டு வரப்படவேண்டியதன் அவசியத்தையும் எனது உரையில் விவரித்தேன்.

இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாகத் தொடக்க விழாவில் நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் சுபாஷினியின் ”உ.வே.சாவுடன் ஓர் உலா”, பேரா. நா. கண்ணனின் ”கொரியத் தமிழ் தொடர்புகள்”, நாவலாசிரியை மாயாவின் ”கடாரம்”, எச்.எச்.விக்கிரம்சிங்கேவின் ”பத்திரிக்கையாளர் எஸ்.எம்.கார்மேகம், வாழ்வும் பணியும்”, முனைவர். மலர்விழி மங்கையின் ”உதயணன் காவிய”ம், தனுசு இராமச்சந்திரனின் ”அருளாளர்கள் அருளிய சிந்தனைகள்” ஆகிய நூல்கள் இந்த வெளியீட்டில் இடம் பெற்றன.

தமிழர் கூத்துக்கலை நலிந்து வரும் ஒரு கலையாகி விட்டது. இதற்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் இந்த மாநாட்டில் சங்ககிரி ராஜ்குமாரின் “நந்திக்கலம்பகம்” தெருக்கூத்து அமைந்திருந்தது. தமிழகத்திற்கும் கம்போடியாவிற்குமான பல்லவர் தொடர்பை மிகத் திறமையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த 90 நிமிட நாடகம் வந்திருந்த எல்லோரையும் கவர்ந்திழுத்து ரசிக்க வைத்தது.

கம்போடியாவில் நடந்து முடிந்த இந்த உலகத் தமிழர் மாநாடு உலகம் முழுமைக்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கச் செய்த அரும் முயற்சி என்பதில் ஐயமில்லை. இந்தக் கூட்டமைப்பு தொடர்ந்து சீரிய முறையில் உலத் தமிழர்களை ஒன்றிணைத்து வர்த்தகத்திலும், தமிழர் வாழ்வியல் வரலாறு தொடர்பான ஆய்வுகளிலும், உலகளாவிய அரசியல் தளத்திலும் தமிழர் வெற்றிக் கொடி நாட்ட பாதை அமைக்கும் என நான் திண்ணமாக நம்புகின்றேன்.

வாழ்க தமிழ். ஓங்குக தமிழர் ஒற்றுமை!

Sunday, April 15, 2018

87. தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல்




எனது தொடர்ச்சியான தேடலில் நான் பல ஆய்வாளர்களைச் சந்திக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்துடன் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள். பலர் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ச்சியாக தம்மை ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுபவர்கள். அப்படி ஒருவர் தான் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பணியில் இருக்கும் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள். 

தமிழகத்தின் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். ஆரம்பக்கல்வி முதல் தமிழ் வழி பள்ளியில் படித்தவர். தமிழிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வினை எழுதி மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பின்னர் அரசு அதிகாரியாக இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர். 

திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தின் பேஸ்புக் வழி எனக்கு நட்பு ஏற்பட்டது. வரலாற்று ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சிந்து சமவெளி ஆய்வுகள் குறித்து அவர் மேற்கொண்டு வரும் மிக ஆழமான ஆய்வுகளின் சிறு செய்தித் துளிகளை அவ்வப்போது என்னுடன் அவர்  பகிர்ந்து கொள்வதுண்டு. இது எனக்குள் தமிழ் மொழிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான ஆய்வினைப் பற்றி தமிழகத்தில் மிக விரிவாக திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் விரிவுரைகள் ஆற்றி, இந்த ஆய்வினைத் தமிழக மக்களும் உலக அளவில் ஆய்வாளர்களும் அறிந்து கொள்ள எமது தமிழ் மரபு அறக்கட்டளை வழி நடவடிக்கைகள் மேற்கொள்ள நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. 


மலேசியத் தமிழராய்ப் பிறந்து உள்நாட்டில் ஏனைய சக சீன, மலாய் மக்களால் கலிங்கா, கெலிங்கா என அடையாளப்படுத்தப்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் எனக்குக் கலிங்க நாடான ஒடிஷாவிற்குச் சென்று வர திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களது அறிமுகமும் நட்பும் கூடுதல் ஊக்கத்தை அளித்தது. அதன் விளைவாக அண்மையில் ஒரு குறுகிய கால பயணம் மேற்கொண்டு ஒடிஷாவின் புவனேஷ்வர் மற்றும் பூரி பகுதிகளில் களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றுத் தகவல்கள் பல சேகரித்து வந்தேன். இடையில் கிடைத்த நேரத்தில் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் நேரில் சந்தித்து சீரிய தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. 


தெற்காசிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் ஏனைய இனத்தோரால் கலிங்கர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவதை ஒரு பொருளாக எடுத்துக் கொண்டு அதனை ஆய்வு செய்து ஒரு கட்டுரையாகவே இவர் படைத்திருக்கின்றார் என்ற செய்தி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. The new lights on the Kalinga in Indonesia என்ற தலைப்பில் அமைந்த இந்த ஆய்வுக்கட்டுரை International Linguistics and Dravidian Linguistics Journal ஆய்வேட்டில் வெளிவந்தது. 

தமிழர்கள், தமிழகம், தமிழக அரசியல் என வரும் போது மூவேந்தர்களை முன்வைத்தே தமிழக எல்லையினை விவரிக்கும் போக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை நாம் மறுக்கவியலாது. மூவேந்தர், முக்கொடி, மூன்று அரசியல் சின்னங்கள், மூன்று பேரரசுகள் என்ற விரிவாக்கப்பட்ட ஆளுமைகளை உள்ளடக்கியதாகவே தமிழகம் அடையாளப்படுத்தப்படுகிறது. சோழர்கள் எனும் போது தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், பூம்புகார், உறையூர், என்ற ஊர்களையும், பாண்டியர்களை அடையாளப்படுத்தும் போது மதுரையையும், சேரர்களை அடையாளப்படுத்தும் போது வஞ்சி, தொண்டி போன்ற ஊர்களையும் நாம் குறிப்பிடுகின்றோம். சங்க இலக்கியங்களிலோ சேர சோழ பாண்டிய மூவேந்தரது பங்களிப்புக்கள் நிறைந்திருக்கின்றன. மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் சங்கத் தமிழ்ப்பாடல்கள் அவர்கள் தமிழால் இணைந்திருந்தமையை உறுதிப் படுத்தும் சான்றுகளாக நம் முன்னே இருக்கின்றன. மூவேந்தர்கள் நில எல்லையின் அடிப்படையில் பிரிந்திருந்தாலும், அவர்கள் தத்தம்  நாடுகளைப் பிரித்து ஆண்டிருந்தாலும், தமிழால் இணைந்திருந்தனர் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. இதனைச் சான்று பகரும் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் நமக்கு இன்று ஆதாரங்களாகக் கிடைக்கின்றன. 


இன்று கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என மாநில வாரியாக எல்லைகள் அரசியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது. நெடுங்காலமாக, நம் இலக்கியச்சான்றோர் பலர் தமிழகத்தின் எல்லையைத் குறிப்பிடும் போது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை” என அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தின் எல்லை என்பது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை தானா” என திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நம் சிந்தனைக்குச் சவாலாக ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகின்றார். தனது தொடர்ச்சியான பல்வேறு ஆய்வுகளின் வழி தமிழகத்தின் எல்லை மிகப் பெரிது என்பதையும், அது இன்று நாம் அடையாளப்படுத்தும் சிந்து சமவெளிப்பகுதி, இமயம் என மிக விரிந்ததொரு பகுதி என்றும் தன் கருத்தினை முன் வைக்கின்றார். 


ஒடிஷாவில் நான் இருந்த ஐந்து நாட்களில் ஒடிஷா மக்களுக்கும் வாழ்வியலுக்கும் அதிலும் குறிப்பாக ஒடிஷாவின் ஆதிக்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைக் கூறுகள் இருப்பதை நான் என் களப்பணியின் போது மக்களை அவதானித்தும் உரையாடியும் அறிந்து கொண்டேன். ஒடிஷா மட்டுமல்ல.. இன்றைய இந்தியாவின் எல்லை, அதனையும் தாண்டி சிந்து சமவெளி வரை திராவிட பண்பாடும் நாகரிகமும் வாழ்வியலும் தான் நிறைந்திருந்தன எனத் தனது பல ஆய்வுகளின் வழி தொடர்ந்து கட்டுரைகளை எழுதிப் பதிப்பித்து வருகின்ற திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். இவரது ஆய்வுகள் இன்றைய கல்வியாளர்களையும் ஆய்வாளர்களையும் எட்ட வேண்டும். 




1988 முதல் இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தனது பணியின் காரணமாகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளைகளில் பழங்குடி மக்களிடம் உரையாடும் வாய்ப்பு இவருக்கு அதிகமாகவே கிடைத்திருக்கின்றது. இந்தப் பயணங்களும் கள ஆய்வுகளும் இவரது திராவிட மொழி தொடர்பான ஆய்விற்கு தரவுகளைத் தருகின்ற அருமையான வாய்ப்பாகவும் அமைந்து விட்டது ஒரு அதிசயமான நிகழ்வுதான். 


தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஒரியா மொழி மட்டுமல்லாது கோயா போன்ற திராவிட மொழிகளையும் இன்னும் சில பழங்குடி மக்களின் மொழிகளையும் இவர் கற்றுள்ளார் என்பதனை இவரோடு உரையாடும் போது நான் அறிந்து வியந்தேன். 

தமிழகத்தில் கூட இன்று சங்க இலக்கியம் கூறும் வாய்வியலைக் காண முடிவதில்லை. வளர்ந்து வரும் அதி வேகமான நாகரிக மாற்றங்கள், சமூக அரசியல் பிரச்சனைகள் ஆகியன, இன்று சங்கம் காட்டும் வாழ்வியல் நிலையிலிருந்து தமிழ் மக்கள் நீண்ட தொலைவில் வந்து விட்டதைக் காட்டுகிறது. தமிழகத்தின் பழங்குடி மக்களின் வாழ்வியலும் கூட சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்திற்கும் தேவைக்கும் தீனி போடும் வகையில் தான் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தன் பணிக்காகப் பயணிக்கும் போது அங்கு தான் காண்கின்ற பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகள் தனக்குச் சங்க கால வாழ்க்கையை தன் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாகக் கூறுகின்றார் இவர். ஒரு தமிழ் இலக்கிய மாணவரான தனக்கு, இப்பழங்குடியின மக்களைக் காணும் போது, தொல்காப்பிய பொருளதிகாரம் சுட்டும் அகத்திணையியல் சூத்திரம் தன் கண் முன்னே தென்படுவதும், திடீரென்று குறுந்தொகையில் நற்றிணையில் வருகின்ற செய்யுள் கூறும் காட்சி கண்முன்னே காட்டப்படுவதையும் தாம் உணர்ந்ததாகக் கூறுகின்றார். சங்ககாலத்தை விவரிக்கும் சங்கப்பாடல்களில் சொல்லப்படுகின்ற குறிஞ்சித் திணை வாழ்க்கை என்பதை இன்று தான் இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்திலும், ஒடிஷாவின் கந்தமால், கோராப்பூட் பகுதிகளில் வாழும் டோங்ரியா, கோண்டு பழங்குடி மக்கள் வாழ்வில் உறைந்து கிடப்பதைக் கண்டு அவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இவர். தன் கண்களின் முன்னே சங்க கால வாழ்வியலை இன்று நிகழ்கால வாழ்வியலாகக் காண்கின்றோமே என வியந்ததன் விளைவே இவரது மிகத் தீவிரமான ஆய்விற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன என்பதை அவரோடு உரையாடும் போதே அறிந்து கொள்ள முடிந்தது. 


இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். அதில் 1990களின் இறுதிகளில் இம்மாநிலத்தின் சிந்துவாரா பகுதிகளில் இன்று நம் தமிழகத்தில் உள்ள மதுரையிலிருந்து கேரளாவின் இடுக்கி செல்லும் பகுதியில் உள்ள தேனீ, கம்பம், தேக்கடி, குமிளி, போன்ற ஊர்களில் இருக்கின்ற ஊர்ப்பெயர்கள் அப்படியே மாற்றங்களின்றி மத்திய பிரதேசத்தின் சிந்துவாரா பகுதியில் இருக்கின்றன என்பது வியப்பல்லவா? இப்பகுதிகளில் திராவிடப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்பது இந்த ஊர்ப்பெயர் ஒற்றுமைக்கும் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் இருக்கும் தொடர்பினை காட்டுவதாக அமைகின்றது என்பதை மறுக்கவியலாது.


”தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல் தமிழக அரசியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது” என்ற உறுதியான கருத்துடன் செயல்படுகின்றார் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள். இக்கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகின்றேன்.

இந்தியாவின் பரந்த நிலப்பகுதிகளில் தமிழர் சான்றுகள் நிறைந்திருக்கின்றன. கல்வெட்டுக்களும் ஓலைச்சுவடி ஆய்வுகள் மட்டுமே தமிழர்களின் வாழ்வியலை நிர்ணயித்து விடக்கூடிய முழுமையான சான்றாதாரங்கள் அல்ல. பழங்குடி மக்களின் வாழ்வியல் கூறுகளை ஆராய்வதும், இந்தியா, பாக்கிஸ்தான், வங்கம், ஆப்கானிஸ்தான், போன்ற எல்லை நாடுகளிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்து விரிந்த ஆய்வினைத் தொடர்வதின் வழியே தான் தமிழ்க்குடியின் வரலாற்றுச் செய்திகளை நாம் நிலை நிறுத்த முடியும். தமிழர்கள் காலம் காலமாகத் திரைகடலோடி திரவியம் தேடியவர்கள். தமிழர்களின் வாழ்க்கை என்பது கூலிகளாகவும், அடிமைகளாகவும் வந்தவர்கள் என்று எழுதப்படக்கூடாது. தமிழர்கள் வீரர்களாக, வணிகர்களாக, புதிய நாடுகளைத் தேடி அங்கே தம் ஆளுமைகளைச் செலுத்தும் தைரியம் மிக்கவர்களாக, தமது தத்துவக் கோட்பாடுகளையும் சமய நம்பிக்கைகளையும் புதிய நிலங்களில் வேறூன்றியவர்களாக அறியப்பட வேண்டியவர்கள். இதனைக் கருத்தில் கொண்டு நம் ஆய்வுகள் மிக விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 


திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., சிந்து வெளி கண்டுபிடிப்புக்கள் தொடர்பாகச் செய்து வரும் ஆய்வுகள் தமிழர் தொன்மங்களை நாம் அறியச் செய்யும் சீறியதொரு முயற்சி. வரலாற்று ஆய்வு மட்டுமே என்று தன் பார்வையை குறுக்கிக்கொள்ளாமல் தம்மை ஒரு இலக்கியவாதியாகவும் இவர் அமைத்துக் கொண்டுள்ளார் என்பது இவருக்கிருக்கும் கூடுதல் சிறப்பு. ஒடிஷாவின் மிக உயர்ந்த அரசுப் பதவி, சிந்துசமவெளி ஆய்வுகள், பழங்குடி மக்கள் ஆய்வுகள் மற்றும் ஊர்ப்பெயர் ஆய்வு, என்பதோடு சங்கத்தமிழை ரசித்தும் திருக்குறளை சிந்தித்தும் கவிதைகளை படைத்து வருகின்றார் இவர். பன்முகத்தன்மை கொண்ட இந்த ஆளுமையுடன் நான் செலவிட்ட சில மணி நேரங்கள் எனது ஆய்வுக்கு விருந்தாக அமைந்தன. இந்த ஆய்வுத் தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து வெளியிடுவோம். அவற்றைப் பார்த்தும் கேட்டும், வாசித்தும் தமிழ் ஆய்வுலகம் பயன்பெற வேண்டும் என்பதே எமது அவா! 







Thursday, April 5, 2018

86. பூரி ஜெகநாத்




ஒடிஷா இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் ஒன்று. வங்கக்கடலை எல்லையாகவும் மேற்கு வங்கத்தையும், ஜார்கந்த், சட்டீஷ்கர், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களையும் எல்லையாகக் கொண்ட மாநிலம். முதலாம் ராஜேந்திரச் சோழனின் திருப்பதி கல்வெட்டில் ”ஒட்ட விசயா” எனப் பெயர் குறிப்புள்ளது. இன்று ஒடிஷா என அறியப்படும் இந்த மாநிலம் கலிங்கம் என வரலாற்றுப் பெயர்கொண்டு திகழ்ந்த ஒரு நிலப்பகுதியாகும். இன்றும் ”கலிங்கா” என்ற பெயருடன் பல நினைவுச் சின்னங்களும், அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் செயல்பட்டு வருவதை பரவலாகக் காண முடிகின்றது.

மௌரியப் பேரரசை ஆட்சி செய்த அசோக மாமன்னன், தனது ஆட்சிக் காலத்தின் 8ம் ஆண்டில் கலிங்கத்தை நோக்கிப் படையெடுத்தான். இது நிகழ்ந்தது கி.மு.261ம் ஆண்டில். இந்த கலிங்கப் போர் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இப்போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்தார்கள் என்றும் ஒன்றரை லட்சம் பேர் சிறைக்கைதிகளாக சித்ரவதைக்குள்ளாயினர் என்றும் கல்வெட்டுச் சான்றுகள் சொல்கின்றன. அதே வேளை இந்தப் போர் அசோகமன்னனை போரை கைவிட்டு, பௌத்த மதம் தழுவி, இன பௌத்த அறத்தை இந்தியா முழுமைக்கும் மற்றும் இலங்கை, ஏனையை கிழக்காசிய, தூரக் கிழக்காசிய நாடுகளுக்கும் பரவச் செய்த அரசியல் முன்னெடுப்பை நிகழ்த்திய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

நெடு நாட்களாக ஒடிஷா சென்று வரவும், அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி ஆராய்ந்து வரவும் எனக்கு ஆழ்ந்த விருப்பம் இருந்தது. எனது இனிய நண்பர் திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்கள் ஒடிஷா அரசில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர். அவரது உதவியுடன் நான்கு நாட்கள் ஒடிஷாவின் பல வரலாற்றுப் பகுதிகளுக்குச் சென்று பதிவுகளைச் செய்து வந்தேன். அப்படிச் சென்ற பகுதிகளில் வைணவப் பாரம்பரியத்தின் கூறுகள் கொண்டதாக அடையாளப்படுத்தப்படும் ஸ்ரீ ஜெகநாத் கோயிலுக்குச் சென்று வந்தேன். புவனேஸ்வர் நகரிலிருந்து ஏறக்குறைய 1 மணி நேர கார் பயணம் அது. இக்கோயிலுக்குள் கைப்பேசி புகைப்பட கருவிகள் ஏதும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

சாதாரண நாளில் ஒரு நாளுக்கு முப்பதாயிரம் பேர் வந்து செல்லும் ஒரு கோயில் இது. நினைக்கவே மலைப்பாக இருந்தது. நான் உள்ளே செல்ல எனக்கு ஒரு சுற்றுலாத்துறை அதிகாரியும், பெண் போலிஸ் அதிகாரியும் உடன் வந்ததால் எல்லா முக்கியப் பகுதிகளையும் பார்த்து சுவாமி வழிபாடும் செய்து வர முடிந்தது.

உள்ளே நுழைந்ததுமே இக்கோயில், அதன் சுற்றுச்சூழல் அனைத்துமே ஒரு எல்லைக்குள் வைத்து ஒப்பிடப்பட முடியாத ஒரு தனி உலகம் என்று புரிந்தது. இக்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். சிறிய கோயில்களாக பல நிறைந்திருக்கின்றன, ஒவ்வொன்றிலும் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆங்காங்கே சன்னிதிகளில் சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன. நாகர் தெய்வ வழிபாடு, பெண்தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்களிலான சன்னிதிகள் நிறைந்திருக்கின்றன. இவை பூர்வகுடி மக்களின் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் கூறுகளாக உள்ளன.

முதலில் வருவது பெரிய மடப்பள்ளி. இங்கு ஒடிஷாவில் இயல்பாக விளையும் காய்கறிகள் மட்டுமே சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மடப்பள்ளியைச் சுற்றி வருவதே ஒரு கண்காட்சி போலத்தான் இருக்கின்றது. பரங்கிக்காய், மரவள்ளிக்கிழங்கு போன்றவை அதிகம் காணப்பட்டன. உருளைக்கிழங்கு தக்காளி ஆகியவை பயன்படுத்தப்படுவதில்லை. விறகுகளை அடுக்கி அறைக்குள் பெரிய பெரிய அண்டாக்களில் பல அடுக்கு பாத்திரங்களில் சமையல் நடைபெறுகின்றது. தண்ணீரை அங்குள்ள குளத்திலிருந்து ஊழியர்கள் கொண்டு வந்து ஒரு பிரத்தியேக வழி அமைத்து அதன் வழி கொட்டி பாதை அமைத்து அனுப்புகின்றனர்.

அங்கு மண்பாண்டங்களில் சமையல் தயாரிப்புக்கள் செய்யப்படுகின்றன. ஒரு நாள் பயன்படுத்திய மண்பாண்டம் மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அன்றே சமையல் முடிந்ததும் மண்பானைகள் உடைக்கப்படுகின்றன. தினம் தினம் ஆயிரக்கணக்கான மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோயிலுக்கென்றே பிரத்தியேகமாக மண்பாண்டம் செய்ய ஒரு அருகாமை கிராமத்தில் தொழில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பது வியப்பளிக்கின்றது.

இக்கோயில் வளாகத்தில் முதலில் ஒரு புத்த விகாரை இருந்து பின் அது பெர்ஷிய மன்னனின் படையெடுப்பின் போது அம்மன்னனின் படையால் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் புத்த விகாரைக்குள் புத்தரின் பல் படிமத்தின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டதாகவும், புத்த விகாரைக்கு ஏற்பட்ட சிதைவு பாதிப்பினை ஏற்படுத்தும் என பயந்த பூர்வகுடி மக்கள் அவர்கள் வழிபாட்டில் உள்ள ”நீல் மாதவ்” என்ற கடவுளை இங்கு வழிபாட்டிற்காகப் பிரதிட்டை செய்திருக்கின்றனர். சிறிய கோயிலாக இது இன்றும் வழிபாட்டில் இருக்கின்றது. பழங்குடி இன மக்களின் இக்கடவுள் கருப்பு நிறத்திலான கடவுள். இந்த கடவுள் உருவத்தின் இருதயப் பகுதியில் முன்பிருந்த புத்த விகாரையில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் உடல் படிமத்தின் பல்லின் ஒரு பகுதி உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இக்கடவுளின் மறு தயாரிப்பு நிகழ்த்தப்பட்டு அந்தப் படிமம் இருதயப் பகுதியில் வைக்கப்பட்டு வழிபாடு தொடர்கின்றது. 12ம் ஆண்டில் மாற்றப்படும் இந்தத் தெய்வச் சிலையின் உருவம் கோயில் வளாகத்தின் ஒரு புறத்தில் உள்ள கல்லறைப்பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் புதைக்கப்படுகின்றது. அதன் எதிர்புரம் இருக்கும் கட்டிடத்தில் புதிய தெய்வ வடிவம் தயாரிக்கப்படுகின்றது. மிக நுணுக்கமான இந்த அமைப்பு வேறு எங்கும் நான் கேட்டிராத, கண்டிராத, அறிந்திராத ஒரு வழிபாட்டு முறை. மர வழிபாடு என்பது மிகப் பழமையான ஒரு வழிபாட்டுக் கூறு. நீல் மாதவ் தெய்வம் வேப்ப மரத்தினால் செய்யப்படுகின்றது என்பது இண்டஹ் மர வழிபாட்டுக் கூறுகள் தொடர்வதைக் காட்டுகின்றன.

இப்போதிருக்கும் ஜெகநாதர் ஆலயத்தை அமைத்தவர் கலிங்கமன்னன் இந்திரதியும்மன். இவர் அமைத்த கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ ஜெகநாதர் (கருப்பு வர்ணத்தில்) அவரோடு அவரது சகோதரி சுபத்திரா(மஞ்சள் நிறத்தில்), அவரது சகோதரர் பாலபத்திரன் (வெள்ளை நிறத்தில்) என வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் அமைத்திருக்கின்றார். மூலஸ்தானத்தில் உள்ள மூன்று தெய்வங்களின் வடிவங்களும் வேப்ப மரத்தினால் உருவாக்கப்படுகின்றன. சிறப்பான தகுதிகள் பெற்ற மரங்களே இத்தெய்வ வடிவங்களைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. மரத்தினால் சுவாமி வடிவம் அமைக்கப்படுவதால் இது அபிஷேகம் செய்யப்படாத மூலவர் வடிவமாக அமைகின்றது. சுவாமிக்குப் பண்டிகை காலச் சூழலைப் பொறுத்து உடை அலங்காரங்களைச் செய்கின்றனர்.

இன்றிருக்கும் கோயில் 11ம் நூற்றாண்டு தொடங்கி கட்டப்பட்டதாகும். கங்கா பேரரசின் கலிங்க மன்னர்கள் கட்டிய கட்டுமானப் பணி இது. வைணவர்களால் ஸ்ரீ ஜெகநாதர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக, 9வது அவதாரமாக இக்கோயிலில் காட்டப்படுகின்றார். விஷ்ணுவின் அதே 9வது அவதாரமாகப் புத்தரும் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பது விந்தை. புத்தரின் படிமம் ஒன்று இங்குத் தொடர்ச்சியாக மாதுகாக்கபப்ட்டு வருவதால் இந்த நம்பிக்கை இருக்கலாம் என்று கருதத் தோன்றுகின்றது.

இக்கோயிலில் மகாலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஜெகநாதர் கோயிலில் நிகழ்த்தப்படும் அனைத்துச் சடங்குகளும் மகாலட்சுமி சன்னிதியில் அனுமதி பெற்றே நடத்தப்படுகின்றது.

ஸ்ரீ ஜெகநாதரும்,சுபத்திரா, பாலபத்திரன் ஆகிய மூவரும் இருக்கும் பிரகாரம் தான் இக்கோயிலின் மையப்புள்ளி. இங்கு எறும்பு ஊர்வது போல மக்கள் நெரிசல் அலை மோதுகின்றது. ஒரு சில விநாடிகள் தான் முதலில் சாமி தரிசனம் கிடைக்கின்றது. பின்னர் தூரச் சென்று நின்று இறைவடிவங்களைக் காண முடிகின்றது. கோயில் முழுக்க உள்ளே புடைப்புச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. முன்னர் வர்ணப்பூச்சுக்கள் இல்லை. ஆனால் இப்போது சுவர் முழுக்க வர்ணச்சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. வைஷ்ணவ தசாவதாரக் கதைகளைச் சித்திரமாகவும் சிற்பங்களாகவும் உருவாக்கியிருக்கின்றனர். இது பிரம்மாண்டக் காட்சியாக இருக்கின்றது.

மனிதர்கள் சாப்பிடுவது போலவே சுவாமிக்கும் அதி காலை உணவு, காலை 10 மணிக்கு ஒரு உணவு, மதிய உணவு, இடையில் மீண்டும் ஒரு உணவு, மாலை உணவு இரவு உணவு என ஆறு வேளை வெவ்வேறு வகையான உணவு (நைவேத்தியம்) சுவாமிக்கு இங்குத் தயாரிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு 9,12, அல்லது 19ம் ஆண்டில் குருமார்கள் குறித்துக் கொடுக்கும் நாளில் கருவறையில் உள்ள மூன்று தெய்வ வடிவங்களின் புதிய வடிவத்திற்கான உருவாக்கம் பெரும் நிகழ்வு நடைபெறுகின்றது, இதனை ”நபக்கலேபரா” என அழைக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்ப மரத்தில் புதிய சாமியின் உருவங்கள் தயாரிக்கப்பட்டு அவை பிரகாரத்தில் வைக்கப்படுகின்றன. இப்போது இருக்கும் இந்த மூன்று தெய்வ வடிவங்களும் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வேப்ப மரத்தினாலான வடிவங்களாகும். புதிய வடிவங்கள் தயாரிக்கப்பட்டு பழைய வடிவங்கள் கல்லறை தோட்டத்தில் தக்க சடங்குகளுடன் புதைக்கப்படுகின்றன.

மூலவர் வடிவங்கள் மூன்றும் ஏறக்குறைய இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பூரி ஜெகநாதர், பௌத்தம்-பழங்குடி இன தெய்வம்-வைணவம் ஆகிய மூன்று வழிபாட்டு அம்சங்களையும் உள்ளடக்கிய வழிபாடு. இந்த ஆலயம் உலகின் வேறெங்கும் இல்லாத, தனித்துவமிக்க ஒரு வழிபாட்டு மையம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!