Thursday, May 12, 2016

13. கரிகால் வளவன் கட்டிய கல்லணை




நீரின்றி அமையாது உலகு. உலகம் செழிக்க நீர் அவசியம். மழையாகவும், பனித்துளிகளாகவும், ஆறாகவும்,  ஓடையாகவும் வடிகின்ற நீர் சரியாக தேக்கி வைக்கும் போது மக்கள் பயன்பாட்டிற்குப் பயன்படும் வகையில் அமைந்து விடுகின்றது. இன்றைக்கு நீர் பயன்பாட்டின் தேவையின் காரணத்தை அறிந்திருப்பதால், நீரைத் தேக்கி வைத்து மக்கள் பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் நீர் தேக்கி வைப்பதற்கான தொழில்நுட்ப முறைகளைப் பற்றியும் உலகின் எல்லா நாடுகளிலும் அரசும் சமூக நலனில் அக்கறை கொண்ட குழுவினரும் தனி மனிதர்களும் கூட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை பொது ஊடகங்களின் வழி அறிகின்றோம்.

நீர் நிலைகளை முறையாகப் பாதுகாக்காதக் காரணங்களினாலும் ஏரிகளையும் குளங்களையும் நீர் நிலைகளையும் கவனிக்காது அவற்றை சேதப்படுத்தியும் அவற்றில் கட்டிடங்களைக் கட்டியும் அழித்ததனால் தமிழகத்தின் சென்னைப்பகுதியே 2015ம் ஆண்டு வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டது என்பதை தமிழர் அனைவருமே அறிவோம். 

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சிந்தனை இல்லாத அக்காலத்திலேயே பல்லாண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் நீரைத் தேக்கி வைத்து நாட்டு மக்கள் விவசாயம் செய்து நல்வாழ்வு வாழ வழி செய்தவன் சோழ மன்னன் கரிகால் வளவன்.  

சங்ககால சோழ மன்னர்களுள் காலத்தால் முந்தியவனாகக் கருதப்படுபவன் சோழன் இளஞ்சேட்சென்னி. இவனது வீரத்தையும், இவனது நால்வகைச் சேனைப்படைகளையும், அவனது வள்ளல் குணத்தையும் விளக்கும் வகையில் அமைந்த இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனது திருக்குமாரனாகப் பிறந்தவன் கரிகாலன். தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றவன் என்ற சிறப்பைக் கொண்டவன் கரிகால வளவன். இவனுக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான், கரிகால் வளவன், வளவன் என்ற பெயர்களும் உண்டு.

கரிகால் வளவனின் ஆட்சி காலத்தில் அவனுக்குப் புகழ் சேர்த்த போர் என்றால் அது வெண்ணி வாயில் போர் எனக் குறிப்பிடலாம்.  தென்னாசிய அளவில் மிகப்பெரியதொரு போர் என்ற சிறப்புடன் இப்போர் வர்ணிக்கப்படுகின்றது. கரிகால் வளவன் தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ள வென்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுடனும், பாண்டிய மன்னனுடனும், பதினொரு வேளிருடனும் போரிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தான். இதனால் தமிழகம் முழுவதும் கரிகால் வளவனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது.  மூன்று தலைமுறைகளாக சோழ மன்னர்களுக்கிடையே இருந்த குழுச்சண்டை முடிவுக்கு வந்து துறைமுக நகரமான புகார் நகரமும், தலநகரமான உறையூரும் பெருமை பெற்றது.  தமிழகத்தைக் கைப்பற்றி பின்னர் வடநாட்டிற்கும் சென்று, அங்குச் செல்லும் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் போர் நடத்தி அவ்வூர்களையெல்லாம் வென்று  இமயம் வரை சென்று அங்கு போரிட்டு வெற்றிக் கொடி நாட்டினான் கரிகால் வளவன். சோழப் பேரரசு தென்னிந்தியா முழுமையுமான பேரரசாகவும், கரிகால் வளவன் பேரரசனாகவும் உருவெடுக்க வெண்ணிப்பறந்தலைப் போர் மிக முக்கியக் காரணியாக அமைந்தது.

தரைப்படை மட்டுமன்றி கடற்படை பலமும் கொண்டிருந்தான் கரிகால் பெருவளத்தான். இப்படை பலத்துடன் இலங்கையில் போரிட்டு இலங்கையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான் இச்சோழமன்னன்.  அவனது ஆட்சி காலத்தில் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு புகார் நகரத்தில் ஏற்பட்டு வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. காவிரி வெள்ளத்தில் அடித்துவரும் மணல்  கடல் வாணிபத்தையும் பாதித்ததோடு கப்பல், மற்றும் படகு போக்குவரத்துக்கு மிகுந்த இடையூற்றையும் ஏற்படுத்தியது. ஆக இதனை சரி செய்ய ஒரு அணையைக் கட்டி நீர் நிலையை சரி செய்து துறை முகத்தை பாதுகாப்பதுடன் தமிழகத்தின் விவசாயத்தைச் செழுமைப்படுத்தவும் முயற்சி எடுத்தான் வளவன். தனது பெரும்படையின் பலத்துடனும் இலங்கைப் போரில் தோல்வி கண்ட படையினரையும் கொண்டு தமிழகத்தின் காவிரியாற்றின் கரைப்பகுதியைச் சீரமைத்து உயர்த்திக் கட்டினான்  பெருவளத்தான். காவிரியில் கல்லணை கட்டி தலைநகரான உறையூர் வரை நிலையான நீர்ப்போக்குவரத்து விரிவடைய வழி செய்தான் நீர் மேலாண்மையில் தனித்திறன் கொண்டிருந்த கரிகால் வளவன். வெண்ணிப் போரின் நினைவாக கரிகாலன் வெட்டிய ஆறு இன்றைக்கு வெண்ணாறு என அழைக்கப்படுகின்றது (வெண்ணியாறு என்பதன் திரிபு). இந்த ஆற்றின் தலைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளதுதான் கரிகாலன் திருமாவளவன் கட்டிய கல்லணை.

இந்தக் கல்லணையைக் கட்ட சோழ நாட்டின் கரூர், முசிறி என்ற நகரங்களிலிருந்து வெட்டியெடுத்து ஆற்று வழியே கொண்டு வரப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவை ஆங்கிலேய காலணித்துவ அரசு ஆண்ட போது இக்கல்லணையைப் பரிசோதித்து இடிக்கும் படி முடிவெடுத்து பொறுப்பை சர் ஆர்தர் காட்டன் என்பவருக்குக் கொடுத்தனராம் .அவர் தலைமையில் இயங்கிய குழு இக்கல்லணையைப் பரிசோதித்து இதன் கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்து அதிசயித்து இதனை Grand Anaicut, அதாவது மாபெரும் அணைக்கட்டு என்று கூறிப் புகழ்ந்து சென்றதாம். 

இந்தக் கல்லணை ஏனைய கல்லணைகளுக்கும் பொறியியல் ரீதியில் உதாரணமாக அமைந்தது. கோதாவரியில் அமைக்கப்பட்ட கல்லணையும் இதே தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டதே. இந்த கல்லணையின் பொறியியல் நுட்பத்திறன் பின்னர் ஆங்கிலேய அரசு அமைத்த பாலங்களின் கட்டுமானம், ஏரி அணை அமைப்புக் கட்டுமாணம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது இதன் தொழில்நுட்பத்திறனுக்குக் கிடைத்திருக்கும் பெருமை.  

சோழமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை பற்றிய விரிவான வரலாற்றுப் பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்றிருந்தபோது செய்து வந்தேன். அது பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை  வலைப்பக்கத்தில் காணலாம்.

உலகமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது நீர் நிலைகளே. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சோழன் கரிகால் வளவன் தூரநோக்குச் சிந்தனையுடன் நாட்டு மக்கள் நலன் கருதி எடுப்பித்த கல்லணை இன்றளவும் காவிரி நீர்ப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி நாட்டு மக்கள் நலன தரும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment