Friday, September 2, 2016

26. தாராசுரம் எனும் கவின்கலைப்படைப்பு




தமிழகத்துக்குச் சுற்றுலா செல்லும்   மலேசியத் தமிழர்கள்   டி-நகர், மற்றும் ரங்கநாதன் சாலை வணிக அங்காடிகளுக்குச் செல்வதும், தமிழகத்தின் கோயில்களுக்குச் சுற்றுலா செல்வதும் பட்டியலில் கட்டாயம் இருப்பவையே. அதிலும் கோயிலுக்குச் சென்று பார்த்து வருதல் எனும்போது பொதுவாக அனேகமானோர் தங்கள் பட்டியலில் சிதம்பரம் சிவன் கோயில், திருவண்ணாமலை சிவன் கோயில், கன்னியாகுமரி அம்மன் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் அல்லது பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றைக் கட்டாயம் பட்டியலில் வைத்திருப்பர்.  இதனைத் தவிர மேலும் சிலர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் போன்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் முக்கிய அம்சமாக வைத்திருப்பர்.   இந்தப் பட்டியலில் உள்ள கோயில்களைத் தவிர மேலும் பல அற்புதமான கட்டிட அமைப்பைக் கொண்ட கோயில்கள் தமிழகத்தில் நிறைந்திருக்கின்றன. எனது ஒவ்வொரு ஆண்டு பயணத்திலும் நான் பார்த்து பதிந்து வந்துள்ள கோயில்களைப் பற்றிய தகவல்கள் பல தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில்  உள்ளன. ஆர்வமுள்ளோர் இவற்றை வாசிப்பதோடு, வாய்ப்பமைந்தால் இக்கோயில்களுக்குச் சென்று அவற்றை பார்த்து கலை நேர்த்தியையும் அவை ஒவ்வொன்றின் சிறப்பினையும் அறிந்து மகிழ வேண்டும் என்பதே என் அவா. அந்த வகையில் கோயில் கட்டுமானக் கலைக்கு ஒரு உதாரணமாக அமைவது தான் தாராசுரம் கோயில்.

தமிழகத்தில்  உள்ள ஊர்களில் கோயில்களுக்குப் பிரசித்தி பெற்ற ஒரு ஊர் கும்பகோணம். அங்கே சோழர்காலக் கோயில்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்த கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் தான் தாராசுரம். இந்த ஊரில் அமைந்திருகும் ஐராவதேஸ்வரர் கோயில்,  கோயில் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இக்கோயிலின் ஒவ்வொரு தூண்களும் பல கதைகள் சொல்லும். வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற சம்பவங்கள் சில நிகழ்ந்த ஓர் ஆலயம் என்ற சிறப்பும் பொருந்திய ஒரு கோயில் இது. தற்சமயம்  யுனெஸ்கொ நிறுவனத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைப்பொக்கிஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு   சிறப்பாகப் பாதுகாக்கபப்டுகின்றது இக்கோயில்.

சோழ மன்னர்களில் இரண்டாம் ராசராசனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளைக் காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.

தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை கல்வெட்டு அறிக்கைகளாகப்  பதிப்பித்துள்ளது.

இரண்டாம் ராசராசன்   கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான்.  இந்த இரண்டாம் ராசராசன், இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகன். கி.பி.1150ம் ஆண்டில் சோழ ராஜ்ஜியத்திற்கு அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டவன் இவன். இரண்டாம் ராசராசன்  சைவ வழிபாட்டை பேணி வளர்த்தவன். சைவ சமயத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்த போதிலும் ஏனைய சமயங்களை ஆதரித்து வளர்க்கும் தன்மையுங் கொண்டவனாக இந்தச் சோழ மன்னன் அறியப்படுகின்றான். முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தன் சோழ ஆட்சிக்கு தலைநகரமாகக் கொண்டிருந்தாலும், பின்னர் பழையாறை நகரை  தனது ஆட்சிக்குப் புதிய தலைநகரமாக  உருவாக்கிக் கொண்டான். சுந்தர சோழன், முதலாம் இராசராசன் போன்றோர் தங்கி இருந்து சிறப்புடன் ஆட்சி செய்த நகரம் பழையாறை. அதனை மீண்டும் புதுப்பித்து தன் ஆட்சிக்கு தலைநகரமாக வடிவமைத்தான் இந்தச் சோழ மன்னன். இந்த நகரின் வடபகுதியில் இருப்பதுதான் தாராசுரம். இங்கே இராசராசேச்சுரம் என்ற ஒரு கோயிலை கட்டினான் இரண்டாம் ராசராசன். அதுவே இன்று தாராசுரம் கோயில் என அழைக்கப்படுகின்றது.

அம்பிகாபதி தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் வரும் பொல்லாத கவிஞர் ஒருவரை இன்றும் நினைவிருக்கலாம். ஒட்டக்கூத்தரே இந்தத் திரைப்படத்தில் வில்லனாகக் காட்டப்படுவார். இந்தத் திரைப்படத்தை எழுதிய கதாசிரியருக்கு பெருங்கவிஞர் ஒட்டக்கூத்தர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. கம்பரையும் அமபிகாபதியையும் புகழ நினைத்து ஒட்டக்கூத்தரை வில்லனாக்கி ஒட்டக்கூத்தரை தமிழ் மக்கள் மத்தியில் அவரது கவிப்புலமையும், அரச சேவையும் சரியாக அறிந்து கொள்ளாத வகையில் செய்து விட்டனர் இந்தத் திரைப்படத்தை எடுத்தவர்கள் என உண்மையில் ஆதங்கப்படுகின்றேன்.

இரண்டாம் இராசராசனின் காலத்தில் அவைப்புலவராக விளங்கியவர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.   இந்த மன்னனைப் புகழ்ந்து இராசராச சோழனுலா என்ற ஒரு நூலை இவர் எழுதியிருக்கின்றார்.  இந்த நூலை அரங்கேற்றியபோது அதில் உள்ள ஒவ்வொரு கண்ணிக்கும் ஒரு ஆயிரம் பொன் எனப்பரிசளித்து  அந்த நூலைப்  பெற்றுக் கொண்டான் அம்மன்னன், என்று சங்கர சோழனுலா எனும் நூல் விவரிக்கின்றது.

இதுதவிர மூவருலா எனும் நூலையும் ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம்  ராஜராஜசோழன் ஆகிய மூவருடைய  புகழைப் பாடுவதாக அமைந்த  நூல் இது.
ஒட்டக்கூத்தரின் புகழை இன்றும் கூறும் நூல் தக்கயாகப்பரணி. அந்த நூலை  எழுதி இந்த தாராசுரம் கோயிலில் தான் அரங்கேற்றினார் ஒட்டக்கூத்தர்.

கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் ராசராசேசுவரமுடையார் என்ற பெயர்   இக்கோயிலுக்கு வழக்கில் இருந்தது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் மாற்றம் பெற்றது.    63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்கு இருக்கும் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால்  இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் தான் முதலாம்  ராசராசசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற தகவல் முதன் முதலாக அறியப்பட்டது. அவை வெவ்வேறு இடத்தில் அமையப்பெற்றிருந்தாலும், பள்ளிப்படைக்கோயில் அவர்களுக்கு எழுப்பப்பட்டது, என்ற செய்தியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருப்பது இக்கோயில் சோழர் கால வரலாற்று ஆவணமாகத் திகழ்வதற்கு ஒரு நற்சான்று.

இக்கோயிலுக்கு நான் 2011ம் ஆண்டு நேரில் சென்றிருந்தேன். என்னுடன் தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் அறிஞர் டாக்டர்.பத்மாவதியும் தம்பிகள் உதயன், செல்வமுரளி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். இக்கோயிலின் வரலாறு, இரண்டாம் ராசராசன், ஒட்டக்கூத்தரின் இலக்கியப் பணி மற்றும் அரசியல் பணி, கோயில் கட்டுமான அமைப்பு எனப் பல செய்திகளை டாக்டர்.பத்மாவதி  அவர்கள்  விவரிக்க அதனை விழியப் பதிவாகத் தயாரித்து அதே ஆண்டு வெளியிட்டேன். அந்தப் பதிவும் இக்கோயிலின் கவின்கலையை விவரிக்கும் மூன்று பக்கங்கள் கொண்ட புகைப்படத் தொகுப்பும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வரலாறு எனும் தொகுப்பில் உள்ளன.

தமிழகக் கோயில் கட்டுமானக் கலையில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு கோயில் தாராசுரம் சிவன் கோயில். இங்கே ஒவ்வொரு கற்களும் கதை சொல்லும். சோழர் கால வரலாற்றில் தனித்துவம் பெறுகின்ற  கோயிலாக இந்த 12ம் நூற்றாண்டு கோயில் இன்றும் அதன் சிறப்பு குறையாமல் வீற்றிருக்கின்றது. 

1 comment:

  1. அருமை தகவல்கள்..,சிறப்புமிக்க கலைக்கோயில்.

    நன்றி சகோதரி.

    ReplyDelete