Wednesday, February 1, 2017

44. தூத்துக்குடி – கடலும் வாழ்வும்



தூத்துக்குடி பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்த ஒரு மாவட்டம். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அருகாமையில் இருந்தாலும் கூட, இந்த ஊரின் நில அமைப்பு இதற்கென்று சில தனித்துவமான தன்மையை வழங்கியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.  2009ம் ஆண்டில் இரண்டு நாட்கள் பயணமாக தூத்துக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அச்சமயம் கடலோர மக்களின் தொழிலான உப்பு தயாரிப்பு பற்றி சில தகவல்களை நான் சேகரிக்க முடிந்தது. அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக வெளியிட்டிருந்தேன். தூத்துக்குடியின் வரலாற்றுச் சின்னங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழும் பனிமயமாதா  திருக்கோயிலுக்கும் சென்று அந்தக்கோயிலின் சமய குருவை பேட்டி செய்து  தூத்துக்குடி பரதவர்கள் பற்றிய சில கட்டுரைகளைச் சேகரித்து அவற்றையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரைகள் தொகுப்பு பகுதியான மரபு விக்கியில் இணைத்து வெளியிட்டோம். இவை விரிவான பல தகவல்களை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கும் கட்டுரைகளாகத் திகழ்கின்றன.

கடந்த ஆண்டு, 2016 டிசம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு நான் களப்பணிக்காகச் செல்ல திட்டமிட்டபோது என் பட்டியலில் தூத்துக்குடியின் பெயரையும் இணைத்திருந்தேன்.  கடல் சார்ந்த தொழில் என்பதுவும் நெசவுத் தொழிலும் தூத்துக்குடியின் பண்டைய தொழில்களில் மிக முக்கியம் பெருபவை. இந்த இரு வேறு தொழில்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பது எனது நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

தூத்துக்குடி துறைமுகம் அயல்நாட்டவர்களுக்குப் பல ஆண்டுகளாக வணிகத்திற்கான மிக முக்கியப் பகுதியாக விளங்கியிருக்கின்றது. இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டே இப்பகுதிகளில் அயல்நாட்டாரின் கடல் வணிகம் தொடர்பான போக்குவரத்துக்கள் மற்றும் அதனை உறுதி செய்யும் வகையிலான இம்மாவட்டத்தில் உள்ள ஊர்களில் நிகழ்ந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் இக்கருத்துக்கு நல்ல சான்றுகளைத் தருகின்றன. இன்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்டால், இப்பகுதி அரேபிய மூர் இனத்தவரால் மிக விரும்பப்பட்ட ஒரு வணிகத்தலமாக விளங்கியமையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இக்காலகட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியாவிற்கு வாணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் வருகை   தமிழக வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை  படிப்படியாக ஏற்படுத்தியது.  தூத்துக்குடியில் கடலில் மூழ்கி எடுக்கப்பட்ட முத்துக்களும் சங்குகளும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பணம் படைத்தோரால் விரும்பி வாங்கப்பட்டன. தென் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட மிளகு ஏலக்காய் போன்றவைகளும் ஐரோப்பாவில் மக்களின் உணவில் படிப்படியாக இடம் பிடிக்க ஆரம்பித்ததன் விளைவாக ஐரோப்பியர்கள் பெருமளவில் தமிழகத்திற்கு, அதிலும் குறிப்பாக கடற்கரை துறைமுகப்பட்டனமான தூத்துக்குடிக்கு வருவது முக்கியமாக கருதப்பட்டது.

அப்படி வருகை தந்த போர்த்துக்கீசியர்கள், உள்ளூர் பரதவ சமூக மக்களோடு இணைந்த வகையில் வணிகத்தில் ஈடுபட்டதோடு கத்தோலிக்க மதப்பிரச்சாரம் செய்து உள்ளூர் மக்களை தாங்கள் கொண்டு வந்த புதிய மதத்திற்கு மதமாற்றம் செய்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெறுகின்றன. அக்காலத்தில் ஏற்பட்டிருந்த  அரசியல் மாற்றமும், பலமிழந்த உள்ளூர் ஆளுமைகளும், சமூக நிலையும் இவ்வகை நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைந்தன. படிப்படியாக மதமாற்றம் செய்யப்பட்ட உள்ளூர் தமிழ் மக்களில் பலர் ஐரோப்பாவிலிருந்து கத்தோலிக்க  சமயத்தை ஏற்றுக் கொண்டனர். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கிருத்துவ இயக்கங்கள் பல ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்ததன் விளைவாக இப்பகுதியில்  படிப்படியாக மதமாற்றம் என்பது நிகழ்ந்தது என்பதோடு அது சமூகத்தளத்தில் விரிவான முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது.

அத்தகைய மாற்றங்களில் மிக முக்கியமானதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதக்கூடியதாகவும் அமைந்தது அக்கால கல்வி நிலை.  ஒரு சில சமூகத்திற்கு மட்டுமே கல்வி என்ற நிலை மாறி அனைவருக்கும் கல்வி என்ற ஒரு சமூக மாற்றம் இந்த வேளையில் நிகழ்ந்தது.  இந்த முயற்சியைத்  தூத்துக்குடியில் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட கிருத்துவ சமய அமைப்புக்கள் முன்னெடுத்தன.  இதற்கு ஒரு உதாரணமாக ஜி.யூ.போப் அவர்களது முயற்சிகளையும் அவர் பெயரில் இன்றும் இருக்கின்ற ஜி.யூ போப் உயர் நிலைப்பள்ளியைக் குறிப்பிடலாம்.

ஆரம்ப நிலைக்கல்வி, உயர் நிலைக்கல்வி என்பதோடு கல்லூரிகளை அமைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டன இந்த கிறித்துவ சமய இயக்கங்கள். பொருளாதார ரீதியாக பெரிய மாற்றத்தை அளிக்கவில்லை என்ற போதிலும் கல்வி வாய்ப்பு கிட்டியமையால் அதனால் பலனடைந்து உயர்கல்வி கற்று தூத்துக்குடியின் குக்கிராமங்களிலிருந்து பெயர்ந்து நகரங்களுக்கு சென்றடைந்து அங்கு அரசு மற்றும் தனியார் துறையில் பணி புரியச் சென்றோர் பலர் உள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

தூத்துக்குடியின் பண்டைய தொழில்களான முத்துக் குளித்தல் என்பது பரவலாக இன்று வழக்கில் இல்லை. கடலோர மீனவ மக்கள் மீன் பிடித்தலையும் சங்கு குளித்தலையும்தான் முக்கிய தொழில்களாகச் செய்து வருகின்றனர்.   மீனவர்களுக்கு இன்று பெரும் சவாலாக இருப்பது இலங்கை கடற்படையினர் வழியாக அவர்கள் சந்திக்கும் அபாயங்கள் எனலாம்.  தூரக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் நலமுடன் திரும்பி வருவார்களா என்பது தினம் தினம் ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் இருக்கின்ற சந்தேகமும் அச்சமும் தான்.

சங்கு குளித்தல் தொழிலை எடுத்துக் கொண்டால் பொதுவாக இத்தொழிலைச் செய்வோர் தூரக்கடலுக்குச் செல்வதில்லை. கடலின் உள்ளே பாய்ந்து தரை மட்டம் வரை சென்று மண்ணைக் கிளறி முத்தெடுக்கும் தொழில் மிகச் சிரமமானது. சங்கு குளிக்கும் ஒருவர் ஆழ்கடலில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் இருக்கின்றார்.  படகிலிருந்து ஒரு குழாய் வழியாக வழங்கப்படுகின்ற ஆக்சிஜன் காற்றினை மூக்கில் சுவாசக்கருவியுடன் பொருத்திக் கொண்டு, ஒரு கையால் மண்ணைக் கிளரும் கருவியைக் கொண்டு ஆழ்கடல் மண்ணைக் கிளறுவதும் இன்னொரு கையால் தான் நிலையாக நிற்பதற்காக ஒரு நீண்ட இரும்புக் கம்பியை மண் அடிப்பரப்பில் குத்தி அதனைப் பிடித்துக் கொண்டும் ஒரு சங்கு குளிப்பவர் செயல்படுகின்றார். இது மிகக்கடினமான ஒரு தொழில். இப்படி சங்கு குளிக்கச் செல்வோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பல.

இவர்கள் சுவாசிப்பதற்காகப் படகிலிருந்து வழங்கப்படுகின்ற ஆக்சிஜன் காற்று ஒரு வித பெட்ரோலியம் கலந்த எண்ணையை இயக்குவதன் மூலம் கிடைக்கின்றது. இதனை நான் நேரில் பார்த்த போது அதிர்ச்சியுற்றேன். மிக அபாயகரமான வகையில் சுகாதாரக் கேடு நிறைந்த சூழலில் இவர்கள் பணிபுரிகின்றனர் என்பதுவும் இதனால் இப்பணியில் ஈடுபடுவோரில் பலர் மூச்சழுத்தம், நெஞ்சுவலி, சுவாசக் கோளாறு, தோல் நோய் என பல்வேறு  உடல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இக்கடற்கரையில் முத்துக் குளித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரை அணுகிப் பேசியபோது அறிந்து கொண்டேன்.

சங்கு குளித்தல் மிக அபாயகரமான ஒரு தொழில் என்பதும் அதனைச் செய்யும் போது ஏற்படக்கூடிய விபத்துக்கள், உடல் ரீதியான சுகாதாரக்கேடுகள் ஆகியன பற்றிய போதிய விளக்கம் பலருக்கும் கிடைக்காமல் இருக்கின்றது என்பதும் வருந்த வைக்கும் உண்மை.  நான் சந்தித்து பேட்டி கண்ட சங்கு குளிக்கும் தொழிலாளி ஒருவர் தங்களுக்கு யாராகினும் சுகாதார விழிப்புணர்வு பற்றி விளக்கம் அளிக்க மாட்டார்களா என பல ஆண்டுகளாக காத்திருப்பதாகவும் ஏதாவது சமூக இயக்கங்கள் தங்களுக்கு ஆலோசனை வழங்க வர வேண்டும் என்றும் அதற்கு என்னால் உதவ இயலுமா, என்றும் கேட்டுக் கொண்டார். இம்மக்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது மருத்துவ ஆலோசனைகள் மட்டுமே. அவர்களுக்குப் போதிய ஆலோசனைகளை வழங்குவதற்கு சமூக நல அமைப்புக்கள் முன்வந்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப் பதிவின் வழி முன்வைக்கின்றேன்.
ஆழ்கடலுக்குச் சென்று கடலினுள்ளேயே இரண்டு மணி  நேரங்கள் இருக்கும் போது மூச்சுத் திணரல் ஏற்பட்டும் அசுத்தமான அமிலங்கள் கலந்த காற்றை சுவாசித்து மாரடைப்பும் இருதய நோயும் ஏற்பட்டு இறந்தவர்கல் பலர் இருக்கின்றனர் என்ற விபரங்களை அவர்கள் சொல்லிக் கேட்ட போது மனம் பதைக்காமல் இருக்க முடியவில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் இத்தொழிலில் இருக்கும் போதே இறந்து விடுகின்றனர் அல்லது ஏதாவது ஒரு கொடும் நோய்க்கு ஆளாகின்றனர் என்பது இத்தொழிலில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

இத்தகைய அபாயகரமான ஒரு தொழிலாக இருந்த போதிலும் சங்கு குளிக்கும் தொழிலை எதற்காகச் சிலர் தொடர்ந்து செய்கின்றனர் என வினவிய போது தான் சங்குகளைப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.

இடது பக்கமாக திறந்த பகுதி அமைந்துள்ள சங்குகள் சாதாரணமானவை. இவை வீட்டு அலங்காரப்பொருட்களாக விற்பனைக்கு வருபவை. மாறாக, வலது பக்கம் திறந்த பகுதி அமைந்த சங்குகள் மிகப் பிரத்தியேகமானவை என்றும் இவை வலம்புரிச் சங்கு என அழைக்கப்படுகின்றன என்றும் அறிந்து கொண்டேன். இந்த வலம்புரிச்சங்கினை கிருஷ்ணபகவான் பாரதப்போரில் ஊதி ஓசை எழுப்புவது போல சித்திரங்களை நாம் பார்த்திருக்கலாம். இவற்றை வைத்திருப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்றும் இதனால் பல பொருளாதார சிறப்புக்கள் ஒருவரை வந்து சேரும் என்றும் மக்கள் நம்புகின்றார்கள் என்றும் அறிந்து கொண்டேன். இந்தியா மட்டுமல்ல; உலகலாவிய அளவில் வலம்புரிச் சங்கிற்கு ஒரு தனி மதிப்பு இருப்பதால் ஒரு வலம்புரிச் சங்கு கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றதாம். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?

பொருளாதார வளத்தைக் கொடுக்கும் இச்சங்குகளை எடுக்கும் தொழில் கடற்கரையோர தமிழர்களின் பண்டைய தொழில்களில் சிறப்பான ஒரு தொழில். இதனைச் செய்யும் தொழிலாளர் நலனைக்காப்பதில் அரசுக்கும் சரி சமூக நலனின் அக்கறைக் கொண்டோருக்கும் சரி, நிச்சயமாக பங்கு இருக்கத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment