Thursday, May 11, 2017

55. பேருந்து பயணத்தில் சந்தித்த மனிதர்கள்




பயணங்களில் நாம் பார்க்கும் நிகழ்வுகளும் நாம் சந்திக்கும் மனிதர்களும் புதிய விசயங்களை நம் அனுபவங்களாக விட்டுச் செல்கின்றன.  எத்தனை எத்தனையோ சிறிய பயணங்கள் எனது நெடிய வாழ்க்கைப் பயணத்தில் வந்து செல்கின்றன.  அப்படி அமைகின்ற பயணங்கள் வாழ்க்கையின் பார்வையை விசாலமாக்குகின்றன. புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. புதிய நிகழ்வுகளை நம்மைக் காணச் செய்கின்றன. இப்படித்தான்  2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகத் தமிழகம் வந்திருந்த போது காரைக்குடிக்குச் சென்று அங்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஒரு கருத்தரங்கினை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு செல்வதற்கு முன்னர் களப்பணிக்காக கிருஷ்ணகிரிக்குச் சென்றிந்தேன். கிருஷ்ணகிரியில் சில பதிவுகளை முடித்து விட்டு தருமபுரி சென்று அங்கும் ஓரிரு பதிவுகளை முடித்து பின்னர் ஈரோடு சென்று அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்குச் செல்வது என திட்டமாகியிருந்தது.

நான் காரைக்குடி செல்வதாக ஏற்பாடாகியிருந்த அந்த நாள் காலையில் திருச்செங்கோடுக்குச் சென்று அங்கு முருகன் ஆலயத்தை தரிசித்து அங்கு அக்கோயிலின் வரலாற்றுப் பதிவுகளும் செய்து விட்டு தோழி பவளா, மற்றும் நண்பர் ஆரூரன் ஆகியோருடன் காரில் புறப்பட்டு கொடுமுடி வந்து அங்கிருந்து நானும் டாக்டர்.நா.கண்ணனும் காரைக்குடிக்குச் செல்லலாம் என நினைத்திருந்தோம். கொடுமுடி வந்து சேர்ந்து அங்கே காவேரிக்கரையில் பதிவுகளை முடித்து  விட்டு புறப்படும் சமயம் சற்றே தாமதமாகிவிட்டதால் கரூர் சென்று அங்கிருந்து எங்களைத் திருச்சிக்குப் பேருந்தில் ஏற்றிவிடுவதாக ஆரூரன் சொல்லிக் கொண்டிருந்தார். காரைக்குடியில் ஏற்கனவே அங்கு நண்பர் முனைவர்.காளைராசன் திருச்சியில் இருக்கும் அவரது மாணவர் ஒருவருக்கு எங்கள் வருகையைப் பற்றி சொல்லியிருந்தமையால் அந்த மாணவர் திருச்சி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து என்னையும் டாக்டர்.நா.கண்ணனையும் காரைக்குடிக்கு பேருந்தில் அழைத்துச் செல்ல வருவதாக இருந்தது. மறுநாள் காலை காரைக்குடியில் நிகழ்ச்சிகள் காலை 6 மணியிலிருந்து தொடங்குவோம் என நான் யோசித்திருந்தேன். அங்கு பதிவு செய்யவேண்டிய வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய பட்டியல் ஒன்றினை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தேன். ஆக,  மனதில் எப்படியும் பேருந்தைத் தவற விடாமல் சரியான நேரத்தில் எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

நாங்கள் கரூரை அடைந்து பேருந்து நிலையம் சென்று காரைக்குடி செல்லும் பேருந்து எப்போது புறப்படும் என்று ஆரூரனும் கண்ணனும் தேடிக் கொண்டு சென்றனர். ஒரு பேருந்து அப்போதுதான் கிளம்பியிருப்பதாகவும் அந்தப் பேருந்தினைக் காரில் விரட்டிக் கொண்டு சென்றால் பத்து நிமிடத்தில் நிச்சயமாகப் பிடித்து விடலாம் என்று பேருந்து நிலையத்தில் யாரோ சொல்ல அதை நம்பிக் கொண்டு ஆரூரனும் கண்ணனும் காருக்கு ஓடி வந்தனர்.
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரூரனின் வாகனம் திருச்சி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டு வேகமாக பயணித்தது. நாங்களும் பேருந்து கண்ணில் தென்படுமா என முன்னால் செல்லும் ஏதாவது ஒரு பேருந்தை நோக்கி எங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தோம். சில இடங்களில் வேகமாக ஆக்ஸலேட்டரை அழுத்தியதில் ஆரூரனின் வாகனம் முன்னே செல்லும் வாகனங்களை எல்லாம் முந்திக் கொண்டு சென்று கொண்டேயிருந்தது. 15 நிமிடங்கள் பயணித்தும் அந்தத் திருச்சி சென்று கொண்டிருந்த பேருந்தை எங்களால்  கண்டுபிடிக்கமுடியவில்லை.
இப்படியே தேடிக்கொண்டே போனால் திருச்சிக்கே போய் சேர்ந்துவிடுவோம் என்பது வாகனத்தில் இருந்த எங்கள் நால்வருக்குமே தெரிந்தது. சரி. மீண்டும் கரூர் பேருந்து நிலையத்துக்கே திரும்பி அங்கிருந்து திருச்சி செல்லும் அடுத்த பேருந்தைப்  பிடித்துச் செல்வோம் என்று சொல்லிக் கொண்டு திரும்பினோம். வந்து சேர்ந்த நேரம் சரியாக ஒரு பேருந்து கிளம்பிக் கொண்டிருக்கவே அதில் அவசர அவசரமாக எங்கள் பொருட்களை ஏற்றி வைத்துக் கொண்டு நண்பர்கள் பவளாவிடமும் ஆரூரனிடமும் விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பேருந்தில் நானும் கண்ணனும் ஏறினோம்.

நகராண்மைக் கழக பேருந்து அது.  பேருந்து நிறைய மக்கள் பலர் அமர்ந்திருந்தனர். கண்ணன் பேருந்தின் முன் வரிசையில் ஒரு இடம் இருக்க அங்கே சென்று விட்டார். அவரிடம் மிகச் சிறிய ஒரு பெட்டி மாத்திரம் இருந்தது. என்னிடம் எனது பெரிய பயண ட்ரோலியோடு கணினி, கேமரா மற்ற ஏனைய பொருட்கள் வைத்திருந்த தோள்பை ஒன்றும் கையில் இருந்தன. இவை இரண்டையும் வைத்துக் கொண்டு கடைசி இருக்கையிலேயே இருந்து விட்டேன். என் அருகில் ஒரு இளைஞர், மற்றும் ஒரு பெண்மணியும் ஒரு நபரும், மேலும் ஒரு பெண்மணி, அவர் கணவர் ஆகிய ஐவர் அமர்ந்திருந்தனர்.

பேருந்தின் பின் இருக்கையில் நான் குறிப்பிட்ட ஐவரோடு நானும் அமர்ந்திருந்தேன். எனது பெரிய பயணப் பெட்டியை எப்படியோ சமாளித்து பேருந்து சீட்டின் கீழ் தள்ளி வைத்து விட்டு எனது கணினி தோள்பையை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒருவர், ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். ஒல்லியான உடல்வாகு கொண்ட மனிதர். அவர் அருகில் ஒரு பெண்மணி அவருக்கும் அதே வயதுதான் இருக்கும். இருவரும் ஏதோ ஒரு  அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களாக இருக்குமென்பது அவர்கள்    உரையாடல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

இருவரும் இடைவிடாது அலுவலகத்தில் உள்ள நபர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு பேச்சு மாறி,  அந்தப் பெண்மணியின் பிள்ளைகள், குடும்ப விஷயம் என்று போய் கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் கேட்பார்களே என்ற தயக்கம் இல்லாமல், கவலையில்லாமல் தொடர்ந்து இந்தப் பேச்சு சுவாரசியமாகப் போய்கொண்டிருந்தது. திடீரென்று யாரையோ கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த மனிதரின் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  சில முறை முயற்சி செய்து பார்த்தார்.  நான் பேருந்து பயணத்தில் இருந்த போது எனக்கு வந்து கொண்டிருந்த  தொலைபேசி அழைப்புக்களை எடுத்து பேசிக்கொண்டிருந்தேன். இதனைக் கவனித்திருப்பார் போல அந்த மனிதர். உடனே என்னைப் பார்த்து, சற்று தொலைபேசி தரமுடியுமா. ஒரு நபருக்கு போன் பேச வேண்டும், என்று கேட்டார். என்னுடைய கைபேசியைக் கொடுத்தேன். அவர் பேச ஆரம்பித்தார். ஏதோ ஒரு விஷயமாக யாரையோ ஓரிடத்தில் மறு நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது பற்றி அந்தப் பேச்சு இருந்தது.

ஏறக்குறைய பத்து நிமிடங்கள் பேசி முடித்த பின் என்னிடம் என் கைப்பேசியை அவர் திருப்பி தரவில்லை. தன் கையிலேயே வைத்திருந்தார். என்னிடமிருந்து வாங்கிய என் கைத்தொலைபேசியை எனக்குத் திருப்பி தரவேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் மீண்டும் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அவராகத் திருப்பித் தரமாட்டார் என்பது தெரிந்து விட்டது. ஆக நானே அவரைக் கூப்பிட்டு என் கைபேசியைத் தரும் படி கேட்டேன். அவர், மீண்டும் அவர் நண்பர் அவரை என் கைபேசியில் கூப்பிடுவார். அதனால் தான் தானே கையில் வைத்திருப்பதாக எனக்கு விளக்கம் அளித்தார். அப்படி போன் அழைப்பு வந்தால் நான் அவருக்குத் திரும்பத் தருவதாகச் சொல்லி என் கைபேசியை நான் வாங்கிக் கொண்டேன். அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது இளைஞன் நாங்கள் என் கைத்தொலைபேசி பற்றி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார் போல. அவருக்கு முகத்தில் புன் சிரிப்பு.

இடைக்கிடையே எங்களின் நீளமான பின் இருக்கையின் இறுதியில்  அமர்ந்திருந்த ஒரு மனிதர் அவ்வப்போது உளறிக் கொண்டு இருந்தார். அவர் அதிகமாகக் குடித்திருந்தார். உடம்பில் போட்டிருந்த சட்டை ஒழுங்காகப் போடப்படவில்லை. மெதுவாக ஏதாவது உளறுவார். திடீரென்று சத்தமாகக் கத்துவார். தன் குடும்பத்துப் பெண்மணிகளைப் பற்றி மிக மோசமான விவரணைகள்; கெட்ட சொற்களில் பெண்களைத் திட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் கண்களைத் திறந்து அந்த மனிதர் யாரையும் பார்த்ததாகத் தெரியவில்லை. அவர் அருகில் இருந்தவர் அவர் மனைவி என்று இருவர் நடவடிக்கைகளிலிருந்தும் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் கத்தும் போது அவரை திட்டி அடக்கி அமைதியாக வைத்திருக்க பெரிய முயற்சி செய்து கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அவர் முகத்தில் அதிகமாக கவலை, வருத்தம், அவமானம் எல்லாம் தெரிந்தது. இப்படி எத்தனை எத்தனை முறை தன் கணவனின் நடவடிக்கைகளினால் அவமானப்பட்டு தலையை கவிழ்த்துக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமோ, தெரியாது.

நாங்கள் அந்தக் குடிகாரர் கூறும் மோசமான சொற்களைக் கேட்டு ஏனையோர்  கோபப்படுவோமோ என்ற பயம் அவர் முகத்தில் தெரிந்தது . எங்களைச் சமாதானப்படுத்தும் வகையில், தன் கணவர்  அதிகமாகக் குடித்து விட்டு உளறுவதாகச் சொல்லி, முகத்தில் இல்லாத  சிரிப்பை வரவழைத்துக் கொண்டு எங்களிடம் சமாளித்துச் சொல்லி வைத்தார். அவர் நிலை பரிதாபம்.

குடித்து விட்டு உளறும் ஆண்களில் சிலர்  ஏன்  குடித்து விட்டால் மிகக் கேவலமாகப் பேசுகின்றனர் ? அதிலும் தங்கள் குடும்பத்து பெண்களை ? மனதிலே அவ்வளவு வெறுப்பும் குரோதமும் ஏன் ஏற்படுகின்ரது? அந்தக்  குடிகாரனை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த மனைவியை அந்தக் குடிகாரக் கணவன், தெய்வமாக அல்லவா கருத வேண்டும்? அப்படிப்பட்ட அந்த குடிகார மனிதனையும் சகித்துக் கொண்டும் இருக்கின்றாரே, என நினைக்கும் போது அப்பெண்ணின் நிலையை நினைத்து மனம் கலங்கியது எனக்கு.

தொடர்ந்து அந்தக் குடிகார மனிதரின்  பேச்சும் உளறலும் குறையவில்லை. திடீரென்று எழுந்து நின்று பேருந்தில் முன் பக்கம் போகப் பார்த்தார் அந்த மனிதர். பேருந்து ஆடிய ஆட்டத்தில் தலையில் முட்டிக் கொண்டு விழுந்தார்.  கண்டக்டர் வந்து நன்றாகத் திட்டித் தீர்த்தார். பார்ப்பதற்கு எல்லாமே நாடகம் போல இருந்தது எனக்கு.
எத்தனை விஷயங்கள் ஒரு பேருந்திற்குள்ளேயே நடக்கின்றன. எத்தனை கதைகளுக்கான கரு பேருந்திலேயே கிடைக்கின்றன என்று நினைத்தபோது சுவாரசியமாகவும் இருந்தது.
ஏறக்குறைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்த நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் அருகில் இருந்த அந்த இருவரும் வழியில் இறங்கி விட்டனர். பேருந்தில் என் அருகில் இப்போது மூவர் மட்டுமே. அந்த இளைஞன். அவர் அருகில் குடிகாரரின் மனைவி, அந்தக் குடிகாரர். பேருந்திலும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அவ்வப்போது அந்தக் குடிகார மனிதர் சத்தமாகப் பேசுவதும், அதனை  கண்டெக்டர் வந்து கண்டிப்பதும் என்ற வகையில் போய் கொண்டிருந்தது.  நாங்கள் பின் இருக்கையில் மூன்று பேர் மட்டுமே. குடிகாரரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். ஒரு உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வருவதாகவும் அவரோடு  இவர்களது பெண் குழந்தைகள் இருவருமாக, ஆக நான்கு பேரும் இப்போது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உறவினர் இல்லத்தில் நண்பர்களும் உறவினர்களும் கூடிவிட்டதால் மகிழ்ச்சியில் அளவுக்கு மீறி குடித்து விட்டாராம். அதனால் அவரை பேருந்திற்குள் கொண்டு வந்து ஏற்றி உட்கார வைத்ததே பெரிய பாடாகி விட்டது என்று விபரம் தெரிவித்தார். அவரது இரண்டு பெண் குழந்தைகளும் சில இருக்கைகளுக்கு முன்னால் அமர்ந்திருப்பதாகவும் இந்த மூன்று பெண்களும் சேர்ந்து தான் இந்த மனிதரை பேருந்தில் ஏற்றியதாகவும் சொன்னார். பேருந்திலிருந்து இந்த மனிதர் எழுந்து ஓடிவிடக்கூடாதே என்பதற்காக அவரை இருக்கையின் மூலைக்குத் தள்ளிவிட்டு இந்தப் பெண்மணி உட்கார்ந்து கொண்டார் என்பதை அவர் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மனிதரால் மனைவிக்கு மட்டுமல்ல மகள்களுக்கும் அவமானம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது அந்த மனிதரை அவர் மனைவி எழுப்பிப் பார்த்தார். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. கண்டக்டர் வந்து விட்டார். கண்டக்டர் அவருக்கே உரிய சத்தமான தொணியில் அவரை விரட்ட, அந்தக் குடிகார மனிதர் ஒரு வகையாக தனக்குத்தான் இந்த  அழைப்பு என்பதைப் புரிந்து கொண்டு எழுந்தார். எழும்போது அவர் கட்டியிருந்த வேட்டி கழன்று விழப் போக, அவர் மனைவி உடனே அதனை சிரமப்பட்டு சரி செய்து வைத்தார். என் அருகில் இருந்த இளைஞர் உடனே எழுந்து அவரை திட்டிக்கொண்டே  உடையை சரி செய்து படிகளில் கைத்தாங்கலாக அக்குடிகாரரின் மனைவிக்கு உதவியாக அம்மனிதரை கீழே இறக்கி விட்டார். இரண்டு பெண்களும் முன் பகுதியிலிருந்தவர்கள் இவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் பார்த்தேன். 14 அல்லது 15 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகள். தலையைக் குனிந்து கொண்டே அந்தப் பெண்கள் கீழே இறங்கி தங்கள் தந்தையின் கைகளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றனர். அந்த அம்மாள் ஏதோ பேசிக் கொண்டே செல்வது பேருந்து புறப்படும் வரை கேட்டது.

இப்போது நானும் அந்த இளைஞனும் மட்டுமே அந்தக் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தோம். அந்த இளைஞன் அந்தக் குடிகார மனிதரைப் பற்றி சொல்லி என்னுடன் பேச ஆரம்பித்தார். அப்படியே எங்கள் பேச்சு குடிகாரரின் கதையிலிருந்து மாறி எங்களைப் பற்றியதாக அமைந்தது. நான் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றியும் மின்தமிழ் பற்றியும் எனது தமிழக வருகைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த இளைஞர் ஆர்வத்துடன் வலைப்பக்க முகவரிகளைக் குறித்துக் கொண்டார். தான் ஒரு அச்சகம் வைத்திருப்பதாகவும் அதன் தொடர்பாக திருச்சி சொல்வதாகவும் தெரிவித்து விட்டு, அச்சகத் தொழில் பற்றி சில விபரங்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். அவரும் திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. பேருந்தோ குலுங்கி குலுங்கி ஆடிக் கொண்டே போய்கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. பேருந்திலிருந்து கேட்பதற்கு பலத்த சத்தமாக அது இருந்தது. ஆனாலும் பயணம் அலுப்புத்தருவதாக இல்லை. திருச்சி வந்தடைந்தபோது குறிப்பிட்ட நேரத்தை விட சற்று நேரமாகிப்போயிருந்தது. என்னையும் டாக்டர்.நா.கண்ணனையும் அழைத்துச் செல்ல வந்திருந்த கல்லூரி மாணவர் எங்களுக்காக வந்து காத்திருக்க அவருடன் அடுத்த திருச்சி செல்லும் நகராண்மைக் கழக பேருந்தினைப் பிடித்து அதில் அந்த நள்ளிரவில் காரைக்குடிக்கானப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

இன்று தமிழகத்தின் சிற்றூர்களிலும் பெரு நகரங்களிலும் பெண்கள் மதுபானக்கடைகளுக்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடக்கியிருக்கின்ரனர். இது பாராட்டுதலுக்குறியது. இவர்கல் போராட்டம் வெற்றியடைய தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது!


No comments:

Post a Comment