Friday, August 4, 2017

65.தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி




இன்று பத்திரிக்கைகளில் தமிழ் எழுத்துக்களை வாசிக்கின்றோம். கணினியில் தமிழில் தட்டச்சு செய்கின்றோம். நமது கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றோம். தமிழ் மொழி எழுத்துக்களின் பயன்பாட்டில் இவையெல்லாம் இன்று மிக எளிதாக நடக்கின்றன.

இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்கள் நமக்கு நன்கு பரிச்சயமானவை. நாம் ஆரம்பப்பள்ளி கற்ற அடிப்படைகளைத் தான் இன்று வரை தொடர்கின்றோம் அல்லவா? தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துகளும், 216 உயிர்மெய் எழுத்துகளும், ஓர் ஆய்த எழுத்தும் என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இதனைத் தமிழ் நெடுங்கணக்கு என்றும் சொல்வோம்.

இன்று நாம் மிகப்பழமையானவை என நாம் கருதுகின்ற, அதாவது இன்று நமக்குக் கிடைக்கின்ற தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆத்திச்சூடி, பத்துப்பாட்டு, அகநானூறு, புற நானூறு போன்றவையெல்லாம் இன்று நாம் பயன்படுத்துகின்ற அதே வரிவடிவத்தில் தானா இருந்தன? இல்லை என்பதே அதற்கு விடையாகும். நம்மில் பலர் இதனைப் பற்றி ஒரு நாளும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரும் இன்று நாம் எழுதும் “அ” எழுத்து அதே போன்று “அ” என இருந்ததாகவும், “க” எழுத்து அதே போன்று “க” என்பதாகவும், “ம்” எழுத்து “ம்” எனவும் மற்றும் ஏனையை அனைத்து 276 எழுத்துக்களும் இன்று போலவே வரிவடிவத்தில் இருந்தன என்றும் நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மையல்ல.

தமிழ் மொழியின் வரிவடிவம் காலத்துக்குக் காலம் பரிணாம வளர்ச்சியடைந்து தான் வளர்ந்து வந்திருக்கின்றது. இதனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?

இந்தக் கருத்தை மனதில் கொண்டு 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு பிரத்தியேக கருத்தரங்கை நடத்தினோம். மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தின் தலைவரும் ஏனைய விரிவுரையாளர்களும் இந்த நிகழ்ச்சியை தங்கள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்வதில் பெறும் ஆர்வம் காட்டினர். இணைப்பேராசிரியர் முனைவர்.சபாபதி அவர்கள் முன்னின்று இந்த முயற்சியை ஏற்பாடு செய்தார். இந்தக் கருத்தரங்கில் நான் மாணவர்களுக்கு தமிழ் எழுத்து வரிவடிவங்களைப் பற்றிய அறிமுகமும், அதன் பரிணாம வளர்ச்சியையும் கல்வெட்டுச் சான்றுகளின் புகைப்படங்களோடு விளக்கினேன்.

தமிழின் தொன்மையான வரிவடிவத்தை அறிந்து கொள்ளவேண்டுமென்றால் நாம் மிக முக்கியமாகத் தமிழகத்திலும் மற்றும் ஏனைய பல இடங்களில் கிடைக்கின்ற தமிழ்க் கல்வெட்டுக்களைத்தான் ஆராய வேண்டும். நமது தமிழ் எழுத்துக்களின் பண்டைய வடிவம் நேர்கோடுகளாகவும் பக்கக் கோடுகளாகவும் கொண்ட வடிவில் அமைந்தவை. இது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளிலும், அகழ்வாராய்ச்சிகளிலும் நமக்குப் பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்த கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் தமிழ் எழுத்தின் வரிவடிவத்தை நாம் வகைப்படுத்தலாம்.

தமிழ்ப் பிராமி என முன்னர் அழைக்கப்பட்ட ஆனால் பின்னர் தமிழி என அழைக்கப்படு ம்வரிவடிவமே இன்று நமக்குக் கிடைக்கின்ற பண்டைய தமிழ் எழுத்துக்களின் வடிவம் எனச் சொல்லலாம். இவ்வகை கல்வெட்டுக்கள் தமிழகத்தில் பல ஊர்களில் கிடைத்துள்ளன. இவற்றின் காலத்தை தோராயமாக கி.மு 6 லிருந்து கி.பி.2 வரை எனக் குறிப்பிடலாம். இவற்றில் மிக முக்கியமானவையாக நாம் கருதப்பட வேண்டியவை திருநெல்வேலி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் கல்வெட்டு, மதுரை மாங்குளம் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டத்து புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டி கல்வெட்டுக்கள், புதுக்கோட்டை சித்தன்னவாசல் கல்வெட்டுக்கள், புகழூர் கல்வெட்டு, ஜம்பைக் கல்வெட்டு, அரச்சலூர் இசைக்கல்வெட்டு, பூலாங்குறிச்சி கல்வெட்டு போன்றவை. இந்தக் கல்வெட்டுக்கள் மிக உறுதியான பாறைகளின் மேல் செதுக்கப்பட்டவை. அனைத்துமே இயற்கையான பாறைகளே.

இக்கல்வெட்டுக்கள் இருக்கும் இடங்களில் உள்ள பொதுக்கூறுகள் சிலவற்றைக் காண முடிகின்றது. அவற்றில் பெரும்பாலானவை சமண முனிவர்களுக்குக் கற்படுக்கை அமைத்துத் தந்தோரது பெயரையும் அவர் பற்றிய செய்திகளையும் கூறுவனவாக இருக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கல்வெட்டுக்கள் உள்ள இடங்களில் தரைப்பகுதியில் சமண முனிவர்கள் படுத்துறங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கைகளையும் நாம் காணலாம். ஒரு சில இடங்களில் மூன்று அல்லது நான்கு கற்படுக்கைகளும் ஒரு சில இடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும் என்ற விதத்தில் கற்படுக்கைகளின் எண்ணிக்கைகளையும் காண்கின்றோம். இச்செய்திகள் தவிர்த்து வணிகர்கள் பற்றியும், தச்சர்கள், கொல்லர்கள் பற்றியும் உள்ள செய்திகளும் கிடைக்கின்றன. ஒரு சில கல்வெட்டுக்களில் மன்னர்களது பெயர்களும் வெட்டப்பட்டுள்ளன. அறச்சலூர் கல்வெட்டு இசைத்தாளத்தைப் பற்றிக் கூறும் தமிழி எழுத்தில் அமைந்த கி.பி2ம் நூற்றாண்டு கல்வெட்டாகும்.

தொன்மைத்தமிழ் எழுத்துக்கள் தமிழி வரிவடிவத்தில் இலங்கையிலும் கிடைத்துள்ளன. உதாரணமாக இலங்கையின் அநுராதபுரத்திலும் கி.பி.5ம் நூற்றாண்டு என அறியப்படும் கல்வெட்டு ஒன்று கிடைத்திருப்பதைக் கல்லெழுத்துக்கலை என்ற நூலில் டாக்டர். நடன காசிநாதன் பதிகின்றார். இந்தியாவில் வட நாட்டோடு ஒப்பிடும் போது, தென்னாட்டிலே, அதிலும் தமிழகத்திலே தான் மிகப் பழமையான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என உறுதியாகக் கூறலாம்.

இந்த தமிழி எழுத்தின் வரி வடிவமானது காலப்போக்கில் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு வளர்ந்துள்ளது. தமிழி வட்டெழுத்து என்றும் தமிழ் எழுத்து என்றும் இரு பிரிவாக வளர்ச்சி கண்டது. இந்த மாற்றத்தை நிகழ்த்தியதில் பெறும் பங்கு அரசுகளையே சாறும்.

பல்லவர்கள் ஆட்சி ஏறக்குறைய கி.பி 4ம் நூற்றாண்டு முதல் சிறிது சிறிதாக வளர்ந்து பின்னர் தமிழகத்தின் வடபகுதி முழுமையையும் தன் ஆட்சிக்குள் கொண்டிருந்தது. தெற்கே பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அக்காலச் சூழலில் சோழர்களோ தங்கல் பலம் குன்றி சிற்றரசர்களாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் தம் எழுத்துருவில் மாற்றம் விரிவடைந்தது. பல்லவர்கள் ஆட்சி செய்த பகுதியில் தமிழ் எழுத்துக்கள் என பெயரிட்டழைக்கப்படும் வரிவடிவங்கள் வழக்கத்திற்கு வந்தன. தெற்கில் பாண்டியர் ஆட்சி செய்த பகுதிகளிலோ தமிழியின் வளர்ச்சி பெற்ற வடிவமாக வட்டெழுத்து உருவெடுத்தது. வட்டெழுத்து உருவானதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. ஓலைச்சுவடிகளில் நேர் கோடுகளாகவும் பக்கக் கோடுகளாகவும் கீறும் போது அது சுவடிகளை சேதப்படுத்துவதால், சிறிது சிறிதாக வளைக்கப்பட்ட வடிவமாகத் தமிழ் எழுத்துக்கள் உருவாக்கம் கண்டன. இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஒரே காலகட்டத்தில் ஒரே தமிழ் மொழிக்கு இரு வேறு வரி வடிவங்கள் வழக்கில் வந்தன.


தமிழகத்தில் மிகப் பரவலாக சமஸ்கிருதப் பயன்பாடும் உருவாகிவிட்ட சூழல் இருந்தது. ஆக, சமஸ்கிருதச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் ஒரு வரி வடிவம் தேவைப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரந்த எழுத்து.

பல்லவர்கள் பயன்பாட்டில் பொதுவாகவே சமஸ்கிருதப் பயன்பாடு என்பது கூடுதலாக இருக்கும். ஆகப் பல்லவர்கள் சமஸ்கிருதச் சொற்களுக்காகப் பிரத்தியேகமாக ஒரு வரி வடிவத்தை உருவாக்கினர். இதுவே பல்லவ கிரந்தம் என் அழைக்கப்பட்டது. மலேசியா, இந்தோனிசியா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, போன்ற நாடுகளில் இன்றும் கிடைக்கின்ற கல்வெட்டுக்கள் இத்தகை பல்லவ கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட கல்வெட்டுக்களே. இவற்றை நம்மில் சிலர் அருங்காட்சியகங்களில் பார்த்திருக்கலாம்.

இன்று நமக்குக் கிடைக்கின்ற வட்டெழுத்துக்களில் குறிப்பிடத்தக்கவையாக நாம் சில சான்றுகளைக் காணலாம். பொதுவாக இவை பாறைக்கல்வெட்டுக்கள், நடுகல் கல்வெட்டுகள், செப்பேட்டில் உள்ள எழுத்து என்பனவாக நமக்குக் கிடைக்கின்றன. அதில் மதுரை ஆனைமலை நரசிம்ம மூர்த்தி குடைவரைக் கோயில் ஜடிலவர்மன் கல்வெட்டு மிக முக்கியமானது. இக்கோயிலில் சுவர் முழுக்க கல்வெட்டுக்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக ஒரு பக்கச் சுவரில் வட்டெழுத்திலும், மறுபக்கச் சுவரில் கிரந்தத்திலும் கல்வெட்டில் ஒரே செய்தி பொறிக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. இன்றைக்கு ஒரு நூலை ஒரு பக்கம் தமிழிலும் மறு பக்கம் ஆங்கிலத்திலும் படிப்பது போல , என எடுத்துக் கொள்ளலாம். தமிழ் மொழி கற்றோரும் சமஸ்கிருதம் கற்றோரும் இருபாலருமே செய்தியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தருமபுரி மாவட்டத்துப் பாப்பம் பட்டி நடுகல், வட ஆற்காடு பெருங்குளத்தோர் நடுகல், திருப்பரங்குன்றம் கல்வெட்டு ஆகியவற்றைக் கூறலாம்.

இப்படி பல்லவர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் தமிழ் என்றும் தென்பகுதியில் பாண்டியர் ஆட்சி செய்த பகுதிகளில் வட்டெழுத்து எனப் பிரிந்த தைழ் வரிவடிவம் பின்னர் சோழக் காலத்தில் தான் ஒரு வரிவடிவம் என்ற வகையில் நிலைபெற்றது. பல்லவர்கள் உருவாக்கிய எழுத்தின் வரிவடிவத்தின் வளர்ச்சியடைந்த வடிவமே கி.பி 10க்குப் பிறகு தமிழகத்தின் பல இடங்களில் நிலைபெற்றது. தமிழகத்தின் பெருங்கோயில்களான கங்கை கொண்ட சோழ புரம், தாராசுரம், தஞ்சை பெருவுடையார் கோயில் போன்றவற்றின் சுவர்களில் நாம் காண்கின்ற எழுத்துக்கள் தான் இவை. இவை தமிழ் வரிவடிவம் என்றே அழைக்கப்பட்டன. அந்த தமிழ் வரிவடிவத்தின் வளர்ச்சி பெற்ற எழுத்துருக்களைத் தான் நம இன்று பயன்படுத்துகின்றோம். கடந்த நூற்றாண்டிலும் கூட தமிழ் எழுத்தில் மாற்றங்களைத் தமிழக அரசு ஏற்படுத்தியது. இதன் பொருட்டு இன்று நம் பயன்பாட்டிலிருக்கும் „னை, ணை, லை, ளை“ போன்ற எழுத்துக்களைக் குறிப்பிடலாம்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் காலை பத்து மணிக்குத் தொடங்கி மதிய உணவு வரை இந்தக் கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையோடு தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தினோம். தமிழ்த்துறை கலந்து கொண்ட அனைவருக்கும் சேர்த்து மதிய உணவினையும் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து தங்கள் ஐயங்களைப் போக்கிக் கொண்டனர். இதேப் போன்று வருங்காலங்களிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் ஆய்வு சார்ந்த பல தகவல்களை வழங்க வேண்டுமென்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் அவா! 

1 comment:

  1. அரிய ஆய்வுத் தகவல்கள்.., நன்றி சகோதரி. தங்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஆய்வாளர்களுக்கும்., தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களுக்கும்., அகமுகிழ் நன்றிமலர்கள்.

    ReplyDelete