Thursday, March 29, 2018

85. மகளிர் மட்டும்



ஒரு பெண்ணுக்கு பலம் அவள் பெரும் கல்வியும் அவள் மன உறுதியும் தான். தெளிந்த சிந்தனையும், சீரான கருத்துக்களும், தன்னைப்பற்றிய சரியான புரிதலும் கொண்ட பெண்கள் சாதனைகளைச் செய்தோராகப் பரிமளிக்கின்றனர்.

பெண்கள் என்றால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பெண்களைப் பற்றிப் பேசினால் அது அவர்களது பலகீனத்தை முன்வைத்து எழுப்பப்படும் நிகழ்வுகளுக்கு எழும்பும் எதிர்வினைகளும் செயல்பாடுகளும் எனக் காண்பது ஒரு வித கண்ணோட்டம். இது இன்றைய அளவில் இன்னமும் தொடர்கின்ற ஒரு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால் இக்காலத் தமிழ்ப்பெண்கள் பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களாக இருக்கின்றனர். வீடு என்ற நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடுபவர்களாக இவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களல்ல. தன்னையும் வளர்த்துக் கொண்டு, தன் குடும்பத்தையும் அரவணைத்துக் கொண்டு, தன் குடும்ப பொருளாதாரத் தேவைகளையும் முன்னெடுத்துச் செயல்படுத்தும் செயல்திறன் மிக்கோராக இக்காலப் பெண்கள் வளர்ச்சி கண்டிருக்கின்றனர்.

அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலக ஐயை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்க வந்த பெண்டிர் பலர் சமூகப் பார்வையைக் கொண்ட ஆளுமைகளாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் படைத்த கட்டுரைகள் பெண் இனத்தின் பல்வேறு கோணங்களை ஆய்வுப்பூர்வமாக அலசுவதாக அமைந்திருந்தது. மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு மலரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஐயை சிவசித்ரா “ சின்னப்பிள்ளை – தமிழக கிராமப் புறப்பெண்களின் தன்னெழுச்சி வரலாறு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வழங்கியிருந்தார். எழுதவும் வாசிக்கவும் தெரியாத ஒரு கிராமத்துப் பெண்பிள்ளை தான் சின்னப்பிள்ளை. இவர் தன் முயற்சியால் நட்ட விதை இன்று ஆலமரமாகச் செழித்து வளர்ந்து பல கிராம மகளிருக்கு உதவும் கரமாக விரிந்திருக்கின்றது. “தன்” என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி ஆறு லட்சம் உறுப்பினர்களுடன் இன்று இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் 12 மாநிலங்களில் தற்சமயம் இந்த அமைப்பு கிளைவிட்டுப் பரவி விரிந்திருக்கின்றது. இந்தக் களஞ்சியத்தின் இன்றைய சேமிப்பு 281 கோடி இந்திய ரூபாய் என்பதைக் கட்டுரை விவரிக்கின்றது.

சின்னப்பிள்ளை கள்ளந்திரி என்ற கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் திருமணம். புல்லுச்சேரி கிராமத்திற்கு வருகின்றார். சில பண்ணையார்களுக்குச் சொந்தமாக இருக்கும் விளைநிலங்களில் வேலை செய்து கூலித் தொழிலாளியாக அவர் வாழ்க்கை தொடர்கின்றது. 1990 வாக்கில் இத்தகைய கூலித்தொழிலாளிகளின் மேற்பார்வையாளராக இருந்த போதிலும் தன் சக தொழிலாளர்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படத்தொடங்கினார். அந்தச் சூழலில் அந்தக் கிராமத்திற்கு திரு.வசிமலை அவர்கள் வருகின்றார்கள். இவர் கிராமப்புற மேம்பாட்டிற்காகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர். அவரது வழிகாட்டுதலுடன் சின்னப்பிள்ளை சேமிப்புத் திட்டத்தை தொடங்குகின்றார்.

முதலில் 20 பெண்கள், மாதம் 20 ரூ முதலீட்டில் ஆரம்பித்த இந்த முயற்சி படிப்படியாக கிராமம் கிராமமாக விரிவடைந்தது. இந்த முயற்சி வெற்றியடைய முக்கியக் காரணமாக இருந்தது சின்னப்பிள்ளையின் நேர்மை, உதவும் மனம், எதிர்காலத்தைப் பற்றிய தூரநோக்குச் சிந்தனை மற்றும் இதில் உறுப்பினர்களாக தம்மை இணைத்துக் கொண்ட பெண்களின் கடும் உழைப்பும் நம்பிக்கையும் தான். இப்படி படிப்படியாக வளர்ந்து இன்று பல கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு நிழல் தரும் குடையாக இருக்கின்றது இந்த “தன்” அமைப்பு. சின்னப்பிள்ளையின் சேவையைப் பாராட்டி இந்தியப் பிரதமர் மத்திய அரசின் விருதான “ஸ்த்ரீசக்திபுஷ்கர்” விருதினை 1999ம் ஆண்டு வழங்கினார் என்பது பெருமையளிக்கும் செய்தி அல்லவா.

அடுத்து நாம் காணவிருப்பது கடந்த ஆண்டு மதத்தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் பற்றிய ஒரு கட்டுரை.

தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் ஐயை முனைவர்.கு.உமாதேவி “கௌரி லங்கேஷின் தாய்மொழி தார்மீகம்” என்ற கட்டுரையின் வழி இந்த ஆளுமையின் தன் தாய்மொழி சார்ந்த செயல்பாடுகளை விவரிக்கின்றார்.

கௌரி கர்நாடகா மாநிலத்தில் 1962ம் ஆண்டு பிறந்தவர். 1985ம் ஆண்டு முதல் 1990 வரை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் பணியாற்றியவர். நவீன கன்னட எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும் லங்கேஷ் என்ற பத்திரிக்கையைத் தொடக்கியவருமான ப்ரகதி ரங்காவின் மகள். ஆங்கிலக் கல்வியை கற்றவர். தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு லங்கேஷ் பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். ஆங்கில வழிக்கல்வி கற்றவருக்குக் கன்னட மொழி பத்திரிக்கையை நடத்துவது, அதிலும் கொள்கை மாறாத வகையில் திறம்பட நடத்துவது என்ற சவால் இருந்தது. விமர்சனங்கள் எழுந்தன. ஆகினும் தன் தாய்மொழி மீது கொண்ட தீவிர ஈடுபாட்டினாலும், சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாட்டுடனும் தனது பணியைத் தீவிரமாக முன்னெடுத்தார் கௌரி லங்கேஷ். கன்னட மொழியைக் கற்கத் தொடங்கிய இவர், தன் பத்திரிக்கை வாயிலாக 850க்கும் மேற்பட்ட திரை-புத்தக விமர்சனங்கள், சுயவரலாறு கட்டுரைகள், விளையாட்டுத் தொடர்பான கட்டுரைகள் என எழுதியிருக்கின்றார். தாய்மொழிப் பற்று, தாய்மொழி அடையாளம், தாய்மொழி பேணுதல் என்ற வகையில் தனது கருத்துக்களை முன் வைத்து மிகத் தீவிரமாக செயலாற்றியவர் இவர்.

இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதன் பிரதிநிதியாக கௌரி மதச்சார்பற்றவராக, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக தன் செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.

தாய்மொழியில் கற்கும் போது ஏற்படும் புரிதல் ஆழமானது. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்கும் திறன் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. தாய்மொழியை மறந்தவர்களாக இருப்பது பெருமையல்ல. எனக்குத் தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் சொல்லிச்சிரிக்கும் பலரை நாம் இன்று காண்கின்றோம். அது தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய ஒரு வித உளவியல் பிரச்சனையே. எந்த வயதிலும் ஒரு மொழியைக் கற்க விரும்புவோர் முயற்சி செய்தால் நிச்சயம் கற்றுக் கொள்ள முடியும். அதிலும் ஒருவர் தனது தாய்மொழியை இளம் வயதில் கற்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் மனம் தளராது முயற்சித்தால் நிச்சயம் மொழித் திறனைப் பெறலாம். தன் தாய்மொழியில் சீரிய பங்காற்றலாம் என்பதற்குக் கௌரி லங்கேஷ் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆசிரியர் முன்வைக்கின்றார்.

அடுத்த கட்டுரை மௌனமாகப் பெண்கள் அனுபவித்து வரும் பாகுபாடு, அதனால் ஏற்படும் சமூக வலிகள் பற்றி பேசுகின்றது. ஐயை கி.உமாமகேஸ்வரி “மௌனப் பெருங்கடல்” என்ற தலைப்பில் சமூகப்பார்வையை ஆழமாகத் தன் கட்டுரையில் முன்வைக்கின்றார். பெண் சமத்துவம், பாரதி கண்ட புதுமைப்பெண் என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் தமிழ்ச்சமூகத்தில் பெண்களைத் தொடர்ந்து வரும் சில கொடுமைகளின் சுவடுகளை ஒதுக்கித் தெள்ளிவிட்டுச் செல்ல முடியாதல்லவா?

இந்தக் காலகட்டத்திலும் விதவைகள் என அடையாளப்படுத்தப்பட்டு அவமானங்களையும் இன்னல்களையும் அனுபவிக்கும் பெண்கள் நம்மில் இருக்கவே செய்கின்றனர். அப்படி விதவை என அடையாளமிட்டு அழைக்கப்படுவோர் அனுபவிக்கும் வலிகள் பன்முகத்தன்மை கொண்டவை. தனிமை தரும் வேதனை, பொருளாதாரச் சார்பு நிலை, உலகம் என்ன சொல்லுமோ என எதிலும் பயம், பதற்றம், பாலியல் ரீதியான பிரச்சனைகள், பழமைவாத சமூகம் தரும் தாக்கம், குடும்ப சுமை என இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சமூகத்தில் மனைவியை இறந்த கணவனை சடங்கு ரீதியாக நம் சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் கணவனை இழந்து விட்டாலோ விதவை என்ற ஒரு பட்டம் தானே கிடைத்து விடுகின்றது. இந்தக் காலத்திலும் கூட மங்கல காரியங்களிலிருந்து விலக்கப்பட்டவளாக அத்தகைய பெண்கள் வாழ்கின்றார்கள். ஆதலால், நம் சமூகத்தில் “விதவை” என்ற சொல்லாடே புழக்கத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றார் கட்டுரை ஆசிரியர்.

இப்படி பல்வேறு கோணங்களில் பெண்களின் சமகால சமூக, பொருளாதார சிந்தனைகளை முன் வைத்து கட்டுரைகள் இந்த நிகழ்வில் படைக்கப்பட்டன.

அயலகத்திலிருந்து வந்து கலந்து கொண்டு பங்களித்த ஆய்வாளர்களுடன் மலேசியாவின் கல்விக்கழகங்கள் சிலவற்றிலிருந்தும் ஆசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் திரளாகப் பங்கு கொண்டு பயன்பெற்றனர். பல நாடுகளைச் சார்ந்த மகளிர் இதுவரை வாட்சப் குழுமம் வாயிலாக மட்டுமே சந்தித்தவர்கள் நேரிலே சந்தித்து ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி மகிழ்ந்தனர்.

பெண்கள் எனப் பேசத்தொடங்கினால் பிரச்சனைகள் தானே முன் நிற்கின்றன என்ற கருத்திற்கு மாற்றாக இருந்தது இந்த ஆய்வுக் கருத்தரங்க நிகழ்வு. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஒலித்தன. ஆக்கப்புர்வமான நட்புச் சூழல் விதைக்கப்பட்டது இந்த நிகழ்வில். இது வளர்ந்து ஆலமரமாகி விழுதுகள் விட்டு வளரும்.

மகளிர் மேன்மை காக்கும் இந்த ஐயை குழுமத்திற்கு என் நல்வாழ்த்துகள்!







No comments:

Post a Comment